தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 MLA-க்களின் தொகுதி புறக்கணிக்கப்படுவதை கண்டித்து உண்ணாவிரதம் இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவிப்பு....
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று அசோக் நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதியில் அரசின் திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை என்றும் அரசின் சலுகைகள் மக்களுக்கு சென்றடையவில்லை என்ற ஆதங்கத்தையும் தினகரனிடம் தெரிவித்தனர். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இந்த மாத இறுதியில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சாதகமான தீர்ப்பு வந்தால் என்ன நிலைப்பாட்டை எடுப்பது, எதிரான தீர்ப்பு வந்தால் 18 பேரும் தேர்தலை சந்திப்பதா? அல்லது அப்பீல் செய்வதா? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இதை கண்டித்து வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று கூறினார். 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்றும், பல கட்சிகள் தங்களுடன் கூட்டணி சேரும் மனநிலையில் உள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார்.