தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணத்தில் இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பல சர்ச்சைகளைக் கிளப்பி போராட்டங்களைத் துவக்கியுள்ளது. பல அரசியல் கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும், சமூக சிந்தனையாளர்களும் இந்த சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
சமீபத்திய தகவல்களின் படி, இந்த கொலையில் தொடர்புடைய 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்களில் சத்யா என்பவரும் ஒருவர். அவர் அதிமுக-வின் தகவல் தொழிநுட்பப் பிரிவில் செயலாளராக உள்ளார் என்றும் அறியப்படுகிறது.
முன்னதாக, அரக்கோணம் பகுதியில் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த சோனூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் சூர்யா, அர்ஜுன் ஆகியோரை பாமக, அதிமுகவினர் படுகொலை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. எனினும், இது குறித்த விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: இரட்டை படுகொலை சம்பவம் கடும் கண்டனத்தை பதிவு செய்த திமுக - வி.சி.கே - காங்கிரஸ்!
மாநிலத்தின் பல இடங்களில் இந்த படுகொலையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. தலித் இளைஞர்கள் படுகொலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அரக்கோணம் பகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சோனூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் சூர்யா, அர்ஜுன் ஆகியோரை பாமக, அதிமுகவினர் படுகொலை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. இந்த கொலைகளில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அதிமுகவைச் (AIADMK) சேர்ந்த பழனி என்பவரைக் கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் நகரத் தலைவர் செல்வம் தலைமையில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
முன்னதாக, தலித் இளைஞர்களின் படுகொலைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சி (VCK) மற்றும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தன.
வி.சி.கே.வின் நிறுவனர் தொல். திருமாவளவன், சாதி வெறியர்களால் "திமுக தலைமையிலான கூட்டணிக்கு காத்திருக்கும் பாரிய வெற்றியை தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்றும், "மத மற்றும் சாதி வெறியர்கள் தமிழ்நாட்டை அழிக்க சதி செய்தார்கள்" என்றும் கூறினார். இந்த இரட்டைக் கொலையின் பின்னணியில், நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற அச்சம் உள்ளது. இந்த அச்சம் காரணமாக அதிமுக - பாஜக - பாமக கூட்டணி கட்சிகள் வன்முறையை கட்டாயப்படுத்தியதால், வாக்குப்பதிவு முடிந்ததும் தலித் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தொல். திருமாவளவன் (Thol. Thirumavalavan) கூறினார்.
ALSO READ: போலி டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றிய அமமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு