Puducherry Helmet Rules News: கடந்த மாதம் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஹெல்மெட் விதியை அமல்படுத்துவதாக அறிவித்தார்.
Puducherry Helmet Latest News: நாளை (ஜனவரி 12) முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல் செய்வதை அடுத்து, ஹெல்மெட் அணிவதை ஊக்குவிப்பதற்காக காவல் துறை, மோட்டார் சைக்கிள் பேரணி மற்றும் மிஷன் ஜீரோ ஃபேடலிட்டி போன்ற விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளது.
பொது மக்கள் மட்டுமின்றி, அரசு ஊழியர்களுக்கு கட்டாயம் இந்த விதியை பின்பற்ற வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு எந்த மாநிலத்தைச் சார்ந்த அரசு ஊழியர்களுக்கு பொருந்தும்? அந்த புதிய உத்தரவு என்ன? போன்ற விவரங்களை குறித்து பார்ப்போம்.
புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழுப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக வருகிற ஜனவரி 12 ஆம் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்களுக்கு முன்மாதிரியாக போலீசார் மற்றும் அனைத்து அரசுத் துறை அரசு ஊழியர்களும் கட்டாயம் ஹெல்மெட்டை அணிய வேண்டும் என்று போக்குவரத்து சீனியர் சூப்பிரண்டு பிரவீன்குமார் திரிபாதி நிர்வாக சீர்திருத்த துறைக்கு பரிந்துரை செய்திருந்தார்.
அதன் அடிப்படையில் நிர்வாக சீர்திருத்த துறை அனைத்து அரசுத் துறைகளுக்கும் அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை, மிஷன் ஜீரோ திட்டத்தின் (Mission Zero Fatality) கீழ் உயரிழப்பை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிற 12 ஆம் தேதி முதல் ஹெல்மெட் உபயோகத்தை கட்டாயமாக அமல்படுத்த உள்ளது.
எனவே இருசக்கர வாகனங்கள் வைத்திருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் தவறாமல் ஹெல்மெட் அணிந்து பணிக்கு வரவேண்டும். இது உங்களது தனிப்பட்ட பாதுகாப்பின் நலனுக்காக அறிவுறுத்தப்படுகிறது என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால் ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் நிறுத்தி வைக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
ஹெல்மெட் அணியாதது குறித்து பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், சொசைட்டிகளில் பணிபுரிபவர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுவரப்படும். அனைத்து நிர்வாக செயலாளர்கள் டிஜிபி துறைத் தலைவர்கள் இதனை உறுதி செய்து கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அந்த அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
எனவே புதுச்சேரில் ஜனவரி 12 முதல் இருசக்கரத்தில் பயணம் செய்யும் அனைத்து அரசு ஊழியர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஹெல்மெட் கட்டாயம் விதியை பின்பற்றவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கும் அரசின் முடிவுக்கு, புதுச்சேரி மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மக்கள் சாலை பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் கூறினார்.