டெல்லி நடைபெற்ற இரு மாநில பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு தலையிட வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழக, கர்நாடக மாநில பிரதிநிதிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தமிழக சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலர் ராமமோகன ராவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். கர்நாடகா அரசு சார்பில் முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சித்தராமையா பேசியதாவது:- கர்நாடக அணைகளில் உள்ள நீரின் அளவு மாநிலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மட்டுமே இருக்கிறது. தற்போதைய சூழலில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது. காவிரி நீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் 'வாழு வாழவிடு' என்று அறிவுரை கூறியுள்ளது. ஆனால், நாங்களும் வாழ வேண்டும் அல்லவா. உச்ச நீதிமன்றம் எங்களையும் வாழ அனுமதிக்கட்டும்" என்றார்.
தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:- காவிரி நீர் திறக்கப்பட்டால்தான் ஒரு போக சம்பாவாவது தமிழக விவசாயிகளால் பயிரிட முடியும். எனவே, கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவதே சரியானதாகும். ஆனால், கர்நாடகா அரசோ காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடாமல் இருக்கிறது. இதை நீதிமன்ற அவமதிப்பாக கருத வேண்டும். கர்நாடக அரசு அரசியல் சாசனத்துக்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது" என்றார்.