உறவினர்களிடமே 6 கோடியை மோசடி செய்த தம்பதி; காஞ்சிபுரத்தில் பரபரப்பு

Crime: கிராம நிர்வாக அலுவலர் உட்பட ஆறு பேர் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தர கோரி பணத்தை பறிகொடுத்த உறவினர்கள் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 17, 2022, 01:56 PM IST
  • ஆன்லைன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி முதலீடு செய்த உறவினர்கள்.
  • உரிய நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தருமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையத்தில் புகார்.
  • உறவினர்களே ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உறவினர்களிடமே 6 கோடியை மோசடி செய்த தம்பதி; காஞ்சிபுரத்தில் பரபரப்பு title=

காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் இலுப்பை தோப்புத் தெருவை சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் சூர்யா வயது 29. இவரிடம் ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேடு கிராமத்தை சேர்ந்த சாம்பசிவம், மலர்கொடி தம்பதியினரின் மகனான தனஞ்செழியனின் மனைவியும்,தாய் மாமன் மகளுமான கங்காதேவி, தனது கணவர் தனஞ்செழியன் மற்றும் அவருடைய சகோதர்களான கிராம நிர்வாக அலுவலரான அதியமான், பரத், பாரி மற்றும் அதியமானின் மனைவி மீரா, வேலூர் அண்ணாநகரை சேர்ந்த சீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து ஆன்லைன் டிரேடிங் செய்வதாக கூறியுள்ளனர்.

தனது தாய் மாமன் மகளான கங்காதேவியும் ஆன்லைன் டிரேடிங் தொழிலில் ஈடுபட்டுள்ளதாலும், ஆன்லைன் டிரேடிங்கில் அதிகளவில் லாபம் கிடைக்கும் என்பதினாலும், இதனை நம்பி சூர்யா கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் 2022 ஆம் ஆண்டு வரை சுமார் 3 கோடியே 77 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். குறிப்பாக ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் தருவதாகவும், ஆறு மாதம் கழித்து அதே ஒரு லட்ச ரூபாய்க்கு 20,0000 தருவதாகவும் சூர்யாவின் உறவினரான தாய் மாமன் மகளான கங்காதேவி மற்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளதை நம்பி, சூர்யா ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் 10,000 தரும் திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி 62 லட்சம் ரூபாயும் , ஒரு லட்ச ரூபாய்க்கு ஆறு மாதத்தில் இரண்டு லட்ச ரூபாய் தரும் திட்டத்தின் கீழ் 2 கோடியே 15 லட்சம் ரூபாயும் என சூர்யா தனது நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரிடம் வசூல் செய்து கொடுத்துள்ளார்.

ஆன்லைன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என சூர்யா மற்றும் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் என பலரும் முதலீடு செய்திருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வரை அவர்களது முதலீடுக்கான மாதத்தவணைகள் முறையாக பெற்று வந்துள்ளனர்.

மேலும் படிக்க | கும்பகோணம் தீ விபத்து 18ம் ஆண்டு நினைவு தினம் - 94 குழந்தைகளுக்கு அஞ்சலி

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடைந்ததால் பணத்தை முறையாக கொடுக்க முடியவில்லை என சூர்யாவிடம் கங்காதேவி மற்றும் அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த நிலைமை சில வாரங்களில் சரியாகிவிடும் என கூறி முதலீடுக்கான எவ்வித மாத்தவணைகளையும் கொடுக்காமல் கிட்டத்தட்ட மூன்று மாதத்தை கடத்தியுள்ளனர்.

மேலும் இது குறித்து ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேட்டில் உள்ள கங்காதேவியின் வீட்டிற்கு சூர்யா நேரில் சென்றப்போது நீங்கள் அளித்த பணத்தை சென்னையிலுள்ள நிதி நிறுவனங்களில் நாங்கள் முதலீடு செய்துள்ளதாகவும், தங்களது பணத்தை பெற தான் கங்காதேவி உள்ளிட்ட சிலர் சென்னைக்கு சென்றுள்ளதாகவும், தங்களது பணத்தை கண்டிப்பாக தந்து விடுவதாகவும் சூர்யாவிடம் அங்கிருந்த கங்காதேவியின் குடும்பத்தார் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | தாலியை கழற்றுவது கணவருக்கு அளிக்கும் மனரீதியான துன்புறுத்தல்: சென்னை நீதிமன்றம்

இதே போல ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி காலம் தாழ்த்தி வந்தவர்கள் கடைசியாக இம்மாதம் 15ஆம் தேதி முதலீடு செய்த பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்த நிலையில் குறிப்பிட்டபடி முதலீட்டு பணம் தராத காரணத்தினால் செய்வது அறியாமல் தாங்கள் உறவினர்களால் ஏமாற்றப்பட்டோம் என உணர்ந்து தங்களை ஏமாற்றிய கங்காதேவி, கங்காதேவியின் கணவர் தனஞ்செழியன், அதியமான், பரத்,பாரி, சீனிவாசன் மற்றும் அதியமானின் மனைவி மீரா ஆகிய ஆறு பேர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தருமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகரிடம் சூர்யாவும், அவருடன் பணத்தை பறிகொடுத்து ஏமாந்தவர்களும், உறவினர்களும் புகார் மனுவை அளித்துள்ளனர்.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் பல ஆயிரம் கோடியை இது போன்றே டிரேடிங் செய்து பல மடங்கிற்கு முதலீடுக்கான மாதத்தவணையை தருவதாக கூறி ஏமாற்றியதாக எழுந்துள்ள புகாரில் பல ஆயிரம் பொதுமக்கள் அவதியுற்று வரும் நிலையில் உறவினர்களிடம் ஆன்லைன் டிரேடிங் செய்வதாக கூறி 6 கோடி ரூபாயை உறவினர்களே ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | வேலைசெய்யும் இடத்திலேயே வைத்து மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்!
 

Trending News