CM on Nivar: 1500 ஹெக்டேர் விவசாய நிலம் பாதிப்பு, சேதம் மதிப்பீடு செய்யப்படும்

நிவர் சூறாவளி தமிழகம் முழுவதும் பேரழிவுகளின் தடங்களை விட்டு விட்டு, வெளியேறிய சில மணிநேரங்களுக்கு பின்னர், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி நிலைமையை மதிப்பீடு செய்தார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 26, 2020, 11:16 PM IST
  • நிவர் புயல் இன்று அதிகாலை கரையைக் கடந்தது
  • கரையைக் கடந்த நிவர் புயல் வடமேற்குத் திசைநோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்
  • கனமழை பெய்யும் வாய்ப்பிருப்பதால் வீட்டிலேயே இருக்கும்படி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்
CM on Nivar: 1500 ஹெக்டேர் விவசாய நிலம் பாதிப்பு, சேதம் மதிப்பீடு செய்யப்படும் title=

நிவர் சூறாவளி தமிழகம் முழுவதும் பேரழிவுகளின் தடங்களை விட்டு விட்டு, வெளியேறிய சில மணிநேரங்களுக்கு பின்னர், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி நிலைமையை மதிப்பீடு செய்தார். புயலால் ஏற்பட்ட சேதங்கள் எவ்வளவு என்று தெரியவில்லை.

கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார்.கடலூரில் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரிடம் மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய பிறகு,    நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்துக் கொண்டார். 

அதன் பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, தமிழக அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்த காரணத்தினால் நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.  

கடலூர் மாவட்டத்தில் சுமார் 1500 ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன என்றும், சேதங்களை மதிப்பிடுவதாகவும், அதற்கேற்றாற் போல நிவாரணங்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட முகாம்களில் சுமார் 52,000 பேர் தங்கியுள்ளனர். புயலால் வேரோடு சாய்ந்த 77 க்கும் மேற்பட்ட மின்சார கம்பங்கள் மீண்டும் சீரமைக்கப்பட்டன. மாவட்டத்தில் 1500 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. சேதங்களை நாங்கள் மதிப்பிடுகிறோம், அதற்கேற்ப நிதியுதவிகள் அறிவிக்கப்படும், ”என்று முதலமைச்சரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிவர் சூறாவளி புயல் காரணமாக, தமிழ்நாட்டில் குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர். 1,000 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. வியாழக்கிழமை பெய்த கனமழையைத் தொடர்ந்து சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.  

நிவர் புயல் அதிகாலையில் கரையைக் கடந்ததால் ஏற்படுத்தியதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்தது. அதோடு, கரை கடந்த இடங்களில் மரங்களை வேரோடு சாய்த்துச் சென்றது நிவர் புயல். நிவர் புயலில் இருந்து நிவாரணம் எப்போது கிடைக்கும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அடுத்த வாரத்தில் மற்றுமொரு புயல் வரலாம் என்ற வானிலை மையத்தின் செய்தி மக்களின் கவலைகளை அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் நிவர் புயலால் சாய்ந்த 1,086 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சில இடங்களில், மரங்கள் மற்றும் சில வாகனங்களின் மீது விழுந்ததால் அவை சேதமடைந்தன. பல இடங்களில் மின்சார கேபிள்கள் சாய்ந்தன.

சென்னையில், பல பகுதிகளில் உள்ள குடிமக்கள் இணைய சேவைகளில் இடையூறு ஏற்பட்டிருப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. மாநிலத்தில் விமான நிலைய நடவடிக்கைகள், மெட்ரோ ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து வியாழக்கிழமையன்று மீண்டும் தொடங்கியது. நவம்பர் 24 முதல் வில்லுபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து போக்குவரத்து சேவைகள் இன்று நண்பகல் முதல் மீண்டும் தொடங்கின.

கரையைக் கடந்த நிவர் புயல் வடமேற்குத் திசைநோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, புயல் கரையைக் கடந்திருந்தாலும், கனமழை பெய்யும் வாய்ப்பிருப்பதால் வீட்டிலேயே இருக்கும்படி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News