உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் -ஸ்டாலின் கோரிக்கை

Last Updated : Mar 7, 2017, 11:02 AM IST
உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் -ஸ்டாலின் கோரிக்கை  title=

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்சோ(22) என்பவர் கழுத்தில் குண்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை கூறியதாவது:- 

தமிழக மீனவர்களை தாக்குவதும், அடாவடியாக கைது செய்வதும், அவர்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதுமான அராஜகத்தில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு இனிமேலும் வேடிக்கை பார்க்கக்கூடாது. 

இலங்கை அரசை தொடர்பு கொண்டோ அல்லது தூதரை வரவழைத்தோ கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கை துப்பாக்கிச்சூட்டில் மீனவர் ஒருவர் பலியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 

மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்கிறார்கள். அவர்களின் பொருளாதார நிலைமை, வாழ்வாதாரம் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல் இலங்கை அரசு தமிழக மீனவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருவதை மனித உரிமைகளை மதிக்கும் எந்த அரசாலும் அனுமதிக்க முடியாது. அதனால் தான் தமிழக மீனவர்களை இரக்கமற்ற முறையில் கைது செய்யும் இலங்கை அரசின் போக்கை கண்டிக்க வேண்டும் என்றும், இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலையும், இதுபோன்ற அத்துமீறிய கைதுகளையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மீனவர் காயமடைந்தது வேதனை அளிக்கிறது. காயமடைந்த மீனவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 

 

 

Trending News