விடுதலை படத்தில் ஆயிரம் குறைகள் உள்ளன... வெற்றிமாறன் கூறும் உண்மை என்ன?

Viduthalai Movie Success Meet: விடுதலை படத்தின் பின்னணி இசைக்கு குறைந்த நேரத்தையே இளையராஜாவுக்கு வழங்கியதாகவும், படத்தில் ஆயிரம் குறைகள் உள்ளதாகவும் இயக்குநர் வெற்றிமாறன், அப்படத்தின் வெற்றிவிழாவில் தெரிவித்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 7, 2023, 03:59 PM IST
  • நினைவுகளில் மறக்க முடியாத படத்தைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி - விஜய் சேதுபதி
  • நல்லவனை நாயகனாகப் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது - வெற்றி மாறன்
  • படம் பார்த்துவிட்டு நான் நல்லா இருக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்தினார்கள் - சூரி
விடுதலை படத்தில் ஆயிரம் குறைகள் உள்ளன... வெற்றிமாறன் கூறும் உண்மை என்ன? title=

Viduthalai Movie Success Meet: ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘விடுதலை’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. 

வெற்றிமாறன் தான் ஹீரோ!

நடிகர் சூரி பேசியதாவது, "விடுதலை படம் ரிலீஸான வேகத்திலேயே இப்படியொரு நன்றி சொல்லும் நிகழ்வு நிகழும் என எதிர்பார்க்கவில்லை. என் வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும். இந்தப் படத்தில் உள்ள அனைவருக்கும் சேர்த்து ஒரு ஹீரோ என்றால் அது வெற்றிமாறன் சார்தான்.  இந்தப் படம் பார்த்துவிட்டு நான் நல்லா இருக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்தினார்கள், நன்றி. 

வெற்றிமாறன் இவ்வளவு பெரிய வாய்ப்பைக் கொடுத்துள்ளார். நிச்சயம் வருங்காலத்தில் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்வேன் என நினைக்கிறேன். சக நடிகனான எனக்கு ஹீரோ விஜய்சேதுபதி, 'மாமா சூப்பர் சூப்பர்' என பாராட்டை கொடுத்துக் கொண்டே இருந்தார். பவானியுடன் நடித்தது மகிழ்ச்சி. ஆதரவு தந்த எல்லாருக்கும் நன்றி" என்றார். 

'நல்ல வேளை நான் பெண்ணாக இல்லை'

நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது,"இந்தப் படத்தில் எனக்கு பிரதானமாக இருப்பது வெற்றிமாறன்தான். மேக்கிங் வீடியோவிலேயே அவரது உழைப்பைப் பார்த்திருப்பீர்கள். நான் ஒரு களிமண் போலதான் அங்கு போவேன். அவர் என்ன சொல்கிறாரோ அதை செய்வேன். அவர் சொல்லாமல், அவரது பிஹேவியரில் இருந்தும் புரிந்து கொண்டு செய்வேன். 

ஏனெனில் மொழி என்பது தாமதமாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான். அதற்கு முன்பு உணர்வுகள்தான் நம்மிடம் பேசும் மொழி.   இந்தப் படத்தின் பெருவெடிப்பு அவருடைய சிந்தனையில் இருந்துதான் தொடங்கியது. எப்போதுமே யானைகள் பணிவாக இருக்கும்போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதன்போலதான், அவருடைய அறிவும், போக்கும், செயல்பாடும் பிரம்மாண்டமாக இருக்கும். அவருடைய கிரகிப்புத் தன்மை எப்போதும் என்னை ஆச்சரியப்பட வைக்கும். நல்லவேளை நான் பெண்ணாக இல்லை. இப்போதும் அவரைப் பார்த்து பேசாததற்கு காரணம் அதுதான். கூச்சமாக உள்ளது. சிந்தனையில் தடுமாறினாலும், மரியாதையில் அவரிடம் தடுமாறியது இல்லை. 

மேலும் படிக்க | விடுதலை படத்தில் நடித்த சூரிக்கு இவ்வளவு தான் சம்பளமா?

மறக்க முடியாத படம்

உணவு சமைக்கும்போதே அதை பரிமாறி சுவைத்துப் பார்க்க சொல்லும் தைரியம் எத்தனை பேரிடம் இருக்கும் எனத் தெரியவில்லை. அப்படி படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே என்னிடம் கேட்டார். அப்படி ஒரு அற்புதமான இயக்குநர் அவர். கதை தொடர்பாக என்னிடம் பல கேள்விகள் இருந்தது. அதை அவரிடம் கேட்டு புரிந்து கொண்டு, வாத்தியாரை திரையில் கொடுத்திருக்கிறேன். இங்கு வாத்தியார் என்பது விஜய்சேதுபதி கிடையாது. பல வாத்தியார்களை கிரகித்துக் கொடுத்த வெற்றிமாறன்தான். இந்தப் படம் இப்படி வெளியானதுக்கு முக்கிய காரணம் வெற்றிமாறன். 

அவருக்கும் படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கும் நன்றி. மக்கள் அதை ஏற்றுக் கொண்டதற்கும் நன்றி. நகைச்சுவை நடிகராக இருந்து, கதையின் நாயகனாக வெற்றி சாரின் மீது நம்பிக்கை வைத்து நகர்ந்து வந்திருக்கும் சூரிக்கும் பாராட்டுகள். க/பெ ரணசிங்கம் படத்தில் பவானியுடன் நடித்திருந்தேன். அதன் பிறகு இரண்டாவது படம் இது. தன் வேலையை சரியாக புரிந்து கொண்டு நடிக்கக்கூடியவர்களில் ஒருவர்.

படத்தில் வரும் காட்டின் அரசன் வேல்ராஜ். அந்த அளவுக்கு சிறப்பான பணியை செய்துள்ளார். ராஜீவ் சார் இந்தப் படத்தில் நடித்தபோது நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். ஒரு மனிதனின் வாழ்க்கையையும் மொழியையும் புரிந்து கொள்ள கூடிய படத்தை அவன் ரசிக்கும்படி கொடுப்பது சாதாரணம் அல்ல. என் நினைவுகளில் மறக்க முடியாத படத்தைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி" என்றார்.

ஆயிரம் குறைகள் உள்ளன
 
நிகழ்வில், இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது,"இந்த மாதிரியான படம் எடுப்பதில் எளிதான விஷயம் என்னவென்றால், இந்தப் படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்வதுதான். அடுத்த எளிதான விஷயம் இந்தப் படத்தைத் தயாரிக்கலாம் என்று நினைப்பது. இந்தப் படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளருக்கு பெரிய நம்பிக்கை வேண்டும். நாங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்தது யாரும் சொல்லவில்லை. 

இப்படி ஒரு கதையை கொண்டு வர அது நாங்களே உருவாக்கிக் கொண்டது. ஆனால், இப்படியான கதையை ஆரம்பிக்கிறோம் என அறிவித்ததில் இருந்தே ஊடகங்கள், ரசிகர்கள் என பலரும் அதைப் பற்றி பேச ஆரம்பித்து ஆதரவு கொடுத்தார்கள். அதுதான் பெரிய விஷயம் என நினைக்கிறேன். இந்தப் படத்தில் ஆயிரம் குறைகள் உள்ளது. ஆனால், அதை எல்லாம் விட்டுவிட்டு இந்தக் கதையின் தீவிரம், கருப்பொருள், நாங்கள் பட்ட கஷ்டம் ஆகியவற்றை மட்டுமே மதிப்பிட்டு கிட்டத்தட்ட அனைத்து மீடியாக்களும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தது பெரிய விஷயம். 

'இளையராஜாவுக்கு குறைந்த நேரம்தான் கொடுத்தேன்'

மக்கள் இந்த கதையின் வலியை அவர்களுடையதாக எடுத்துக் கொண்டாடினார்கள். அது எங்களுடைய நன்றிக்குரியது. ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு நன்றி. இந்தக் கதையில் நல்லவன் நாயகன். நல்லவனை நாயகனாகப் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது. நல்லவனை கதைநாயகனாக ஏற்றுக் கொண்டார்கள். இந்தப் படத்தில் வழக்கமான டெம்ப்ளேட் இல்லை. அதையும் ஏற்றுக் கொண்டு இரண்டாம் பாகத்திற்கும் காத்திருப்பதாக சொன்ன அனைவருக்கும் நன்றி. இன்னும் இது போன்ற புதிய முக்கியமான கதைக்களங்களை சொல்வதற்கும் ஊக்கமாக இருக்கும். 

ரெட் ஜெயண்ட் படத்தைப் பார்ப்பதற்கு முன்பு ராஜா சார் படத்தப் பார்த்துவிட்டு 'பெரிய படமாக வரும். என்ன மாதிரியான இசை வேண்டுமோ கேள்' என கேட்டு படத்திற்கு முழு ஆதரவும் கொடுத்தார். ஏனெனில் நான் படத்தின் பின்னணி இசைக்கு குறைவான நேரத்தையே கொடுத்தேன். அதை எல்லாம் பொறுத்துக் கொண்டார். அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி” என்றார்.

மேலும் படிக்கும் | விடுதலை படத்தை குழந்தைகள் பார்க்கலாமா... ரோகிணி தொடர்ந்து அடுத்த பிரச்னை - முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News