திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றின் காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளித்த நிலையில், டிசம்பர் மாதம்அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற கருணாநிதி அதன்பிறகு வீடு திரும்பினார். இதற்கிடையே, டிசம்பர் மாதம் 15-ம் தேதி மூச்சு திணறல் காரணமாக கருணாநிதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, 9 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் பின்னர் வீடு திரும்பினார்.
அதன்பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் கட்சிப் பணிகளை எதுவும் மேற்கொள்ளவில்லை. சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வெடுத்து வருகிறார்.
தற்போது அவர் கடந்த 24-ம் தேதி சளித்தொந்தரவு ஏற்பட்டததில் மூச்சு விடுவதற்கும் கடுமையாக சிரமப்பட்டார். இதனால், காவேரி மருத்துவமனையில் இருந்து வந்த சிறப்பு டாக்டர்கள் கருணாநிதிக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளித்தனர். சக்கர நாற்காலியில் உட்கார முடியாத நிலையில் கட்டிலில் அவர் படுக்க வைக்கப்பட்டுள்ளார்.
டாக்டர்கள் நேற்று அவரது கை நரம்பு வழியாக சில மருந்துகளை செலுத்தியுள்ளனர். வீட்டில் உள்ளவர்கள் யாரையும் பகல் நேரத்தில் அவரை பார்க்க டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. மாலையில் ஒவ்வொருவராக சென்று கருணாநிதியை பார்க்க டாக்டர்கள் அனுமதித்தனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கோபாலபுரம் இல்லத்திலேயே இருந்தார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், நேற்று காவேரி மருத்துவனமையின் செயல் இயக்குனர் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில்,
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது.
அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக்கொள்கிறது. வீட்டிலேயே ஆஸ்பத்திரி வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கிறது.
கருணாநிதியின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்று டாக்டர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.