தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வாசித்தார்.
அப்போது அவர் 5 புதிய திட்டங்களை அறிவித்தார். அந்த 5 திட்டங்களில் முதல் 3 பள்ளி மாணவர்களுக்கானது. பள்ளி மாணவர்களுக்கான 3 திட்டங்கள் பின்வருமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்:-
ஓராண்டு முடிந்து, இரண்டாவது ஆண்டு தொடங்கும் இந்த மகிழ்ச்சிக்குரிய நாளில் மக்கள் மனம் மகிழும் சில அறிவிப்புகளை நான் வெளியிட இருக்கிறேன். சில மிக முக்கியமான ஐந்து பெரும் திட்டங்களை இந்த மாமன்றத்திற்கு அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
முதலாவது திட்டம் - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும்.
நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது.
பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டு இந்தத் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம். முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம். படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இரண்டாவது திட்டமானது, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் திட்டம்.
ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தில் கிடைத்த தகவல் மிக மிக மன வேதனையைத் தருவதாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பரிசோதித்ததில் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக இருந்தார்கள். வயதுக்கேற்ற எடையும் இல்லை; வயதுக்கேற்ற உயரமும் இல்லை.
மேலும் படிக்க | 26/11 சூத்திரதாரி ஹபீஸ் சயீத்துக்கு 31 ஆண்டு சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு
மிக, மிக, மெலிந்து இருக்கின்றார்கள். உடலில் உறுதி இல்லாவிட்டால் அவர்களது எதிர்காலம் என்பது கேள்விக்குறியாக ஆகிவிடும் என்பதை உணர்ந்து இதற்கென தனியாக ஒரு திட்டத்தைத் தீட்ட நான் ஆலோசனை கூறினேன்.
6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம்.
மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ், குழந்தைகள் பயனடைவார்கள். தமிழகக் குழந்தைகள் அனைவரையும் திடமான, ஊட்டச்சத்துக் குறைபாடில்லாதவர்களாக மாற்றுவதற்கான திட்டமாக இதனை நாம் வடிவமைத்துள்ளோம்.
மூன்றாவது திட்டம் ‘தகைசால் பள்ளிகள்’ என்ற திட்டம்!
‘Schools of Excellence’ என்று இதற்குப் பெயர். சென்ற ஏப்ரல் மாதம் டெல்லி சென்ற நான், அங்கு டெல்லி அரசின் சார்பில் நடத்தப்படும் மாதிரிப் பள்ளியைப் பார்வையிட்டேன். அப்போது டெல்லியினுடைய முதலமைச்சரே அழைத்துக்கொண்டு சென்று அதையெல்லாம் விளக்கிச் சொன்னார்கள். இதேபோல் தமிழ்நாட்டிலும் உருவாக்கப்படும் என்று அங்கேயே நான் சொல்லிவிட்டு வந்தேன். அந்த அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
முதலில், முதற்கட்டமாக 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 மாநகராட்சி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சீரமைக்கப்படும்.
அனைத்துக் கட்டடங்களும் நவீனமயமாக்கப்படும். மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கக்கூடிய அதேநேரத்தில், கலை, இலக்கியம், இசை, நடனம், செய்முறை அறிவியல், விளையாட்டு, கைவினைச் செயல்பாடுகள் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பு அந்தப் பள்ளியில் உருவாக்கப்படும்.
மாணவர்களின் பல்வகைத் திறன்களையும் வெளிக்கொண்டு வருவோம். படிப்புடன் சேர்ந்து அவர்களது தனித்திறன்கள் அனைத்தும் வளர்த்தெடுக்கப்படும். அவர்களுடைய ஆளுமைத் திறன் அனைத்தும் மேம்படுத்தப்படும். இந்தவகைப் பள்ளிகளைத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக விரிவுபடுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அறிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR