தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் (OPS), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி (EPS) நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது :-
தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், தங்களது பொன்னான வாக்குகளை அளித்துள்ள வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இதயமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து 10 ஆண்டு காலம் நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக ஆற்றி இருக்கும் அரும் பணிகளை மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
ALSO READ | திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்
நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒருபக்கம் ஆளும் கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித் தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாகவும் செயல்பட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தமிழக சட்டமன்றத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும் எதிர்க்கட்சி என்னும் பெரும் பொறுப்புடன் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அவை அனைத்தையும் மனத் தூய்மையுடனும், கழகத்தின் கொள்கை வழி நின்றும் செவ்வனே நிறைவேற்றுவோம்.
நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக இரவு, பகல் பாராது அரும் பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும்; தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வழிநடத்தப்பட்டு, ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி இருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மக்கள் பணிகளை ஆற்றுவதற்கும், கழகத்தைக் கட்டிக் காக்கும் கடமையில் தோளோடு, தோள் நின்று உழைப்பதற்கும், கழக உடன்பிறப்புகள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம், எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | தமிழகம்: அமோக வெற்றி வெற்று அடுத்த முதல்வராகிறார் மு.க. ஸ்டாலின்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR