ஒளிப்பதிவு சட்டத் திருத்தம்: கருத்துரிமையை பாதிக்கிறதா? திரையுலகின் பார்வை என்ன?

பாமரர்கள் முதல் பணம் படைத்தவர்கள் வரை அனைவரையும் சென்று சேரும் வல்லமை சினிமாவுக்கு உண்டு. ஒளிப்பதிவு வரைவு திருத்தச்சட்டம் சினிமாவின் படைப்புச் சுதந்திரத்தை தடுக்கும் விதமாக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 10, 2021, 05:20 PM IST
  • ஒளிப்பதிவு வரைவு திருத்தச்சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
  • முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒளிப்பதிவு வரைவு திருத்தச்சட்டத்தினை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று கடிதம் மூலம் வலியுறுத்தியிருக்கிறார்.
  • இந்த ஒளிப்பதிவு வரைவு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தால் திரையுலகமே பெரிதும் பாதிக்கப்படும் - கலையுலக வல்லுனர்கள்.
ஒளிப்பதிவு சட்டத் திருத்தம்: கருத்துரிமையை பாதிக்கிறதா? திரையுலகின் பார்வை என்ன? title=

சினிமா வெகுஜன மக்களை எளிதாக அணுகக்கூடிய ஒரு ஊடகம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பாமரர்கள் முதல் பணம் படைத்தவர்கள் வரை அனைவரையும் சென்று சேரும் வல்லமை அதற்கு உண்டு. சினிமாவிற்கு என்று தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதிலுமே ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. உலகளவில் ஒரு வருடத்திற்கு அதிகமாக வெளிவரும் திரைப்படங்களில் இந்தியா ஒரு குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. 

சினிமாவின் படைப்புச் சுதந்திரத்தை தடுக்கும் விதமாக ஒளிப்பதிவு வரைவு திருத்தச்சட்டம் (Cinematograph act act 2021) உள்ளது. இந்தச் சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. போன மாதம் ஜூன் 18 இல் பதிவு திருத்தச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே நாடு முழுவதும் உள்ள திரைக்கலைஞர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த சட்டம் குறித்து திரைக்கலைஞர்கள் கூறுவதாவது: ஒரு கலைப் படைப்பை அரசே எடைபோட்டு மக்களுக்கு நல்லது எது கெட்டது எது என அரசே முடிவு செய்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டம். இந்தச் சட்டத்தினால் சென்சார் செய்யப்பட்ட படமாகவே இருந்தாலும் அரசு அதில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். மற்றும் திருத்தங்களையும் செய்ய முடியும். அந்தப்படம் வெளியாகாமாலும் நிரந்தரமாக தடை செய்ய முடியும். 

இச்சட்டம் நடைமுறைக்கு வருமாயின் ஆளுகின்ற அரசுக்கு எதிரான குரல்கள் விமர்சனங்கள் நசுக்கப்படும்.  இவை ஜனநாயக்த்திற்கே எதிரானது. இது ஒரு பாசிச மனப்போக்காகும். சில ஆண்டுகளாகவே சினிமா மட்டுமின்றி யூடியூப் போன்ற சமூக ஊடகங்களிலும் கருத்து சுதந்திரம் கேள்விக்குறியாகவே உள்ளது. அதாவது உண்மை சம்பவங்களையோ,அரசியல் நிகழ்வுகளையோ காட்சிப்படுத்தினால் அதனை ஒரு சில அரசியல் இயக்கங்கள் ஊதிப் பெரிது படுத்துகின்றனர். சில நேரங்களில் அந்தப் படமே தடைபட்டுப் போகும் அளவிற்கு கூட சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. 

இதுபோன்ற சிக்கலில் மாட்டிய படங்கள் பல்வேறு போராட்டங்களை சந்தித்த பின்னரே வெளியாகி இருக்கின்றன. கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் ஒரு திரைப்படம் பொதுமக்களுக்கு திரையிடப்படுவதற்கு முன்பே அப்படத்தை மத்திய திரைப்பட தணிக்கை குழுவிடம் சென்சார் போர்டு (Central board film certification) உறுப்பினர்களிடம் காண்பித்து படத்திற்கு சான்றிதழ் பெற்றாக வேண்டும். அவர்ள் படத்தினைப் பார்த்து (U,U/A,A) என சான்றிதழ் கொடுப்பார்கள். 

ALSO READ: ஒளிப்பதிவு திருத்த மசோதா விவகாரம்: ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்

சில சமயங்களில் சென்சார் போர்டில் உள்ளவர்களே ஒரு சார்பு உடையவர்களாக இருந்தால், அவர்களின் கருத்தியலுக்குக்கெதிரான  படைப்பினை படைப்பாளி எடுத்திருந்தால், படத்தின் காட்சிகளை வெட்டி விடுவதுண்டு. இதுபோன்ற சம்பவங்களால் படைப்பாளியின் கருத்துச் சுதந்திரமும் ஜனநாயகத் தன்மையும் பெரிதும் பாதிக்கப்படும் அச்சம் இருக்கிறது.

இதனால் படைப்பாளிகள் அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்க முடியாதவர்களாகி விடுகிறார்கள். அரசுக்கு எதிரான ஒரு படைப்பினை அவர்களால் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு விஷயம் மட்டும் என்று நாம் கடந்து செல்ல முடியாது. பல வரலாற்று சமூகப் பிரச்சினைகளையும் அன்றைய கால அரசியல் சூழலையும், மக்களுக்காக பேசக்கூடிய ஒரு மிகப்பெரிய காட்சி ஊடகமாகவும் சினிமா உள்ளத்ய். இப்படியிருக்க தணிக்கை குழுவில் ஆள்கின்ற அரசு சாதகமானவர்கள் அமர்ந்து கொண்டு, அவர்களது சித்தாந்தகளுக்கு எதிரான படங்களுக்கு பல பிரச்சினைகளை தருவது என்பது படைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது. 
இந்தப் போக்கினால் உண்மை தன்மையுடன் எடுக்கக்கூடிய படங்களினை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாமல் போகிறது. இச்சட்டத்திற்கு திரைத்துறைகளிலிருந்து கண்டன குரல் எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக நடிகர் கமலஹாசன் (Kamal Haasan) சினிமா, ஊடகம், கல்வி ஆகிய மூன்றும் இந்தியாவில் பலரும் அறிந்த மூன்று குரங்குகளாக மட்டும் இருக்க முடியாது என்றும் தீமைக்கு எதிராக குரல் கொடுப்பதே ஜனநாயகத்தை காக்கும் சிறந்த மருந்தாக இருக்கும் என்றும் தனது கருத்தை மத்திய அரசுக்கு காட்டமாக எடுத்துரைத்தார். 

நடிகர் சூர்யாவும் (Actor Suriya) சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக தானே ஒழிய குரல்வளையை நெறிப்பதற்கு அல்ல என்று கூறினார். இவர்களைத் தவிர இயக்குனர் வெற்றிமாறன், நடிகர்கள் கார்த்தி, ரோகிணி போன்றோரும் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து இச்சட்டத்திற்கு எதிராக திரைத்துறை சார்பாக ஒரு கோரிக்கை மனுவினை அளித்து வந்துள்ளனர். 

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒளிப்பதிவு வரைவு திருத்தச்சட்டத்தினை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று கடிதம் மூலம் வலியுறுத்தியிருக்கிறார். தமிழ் திரையுலகம் மட்டுமின்றி அனுராக் கஷ்யப், நந்திதா தாஸ் போன்ற இந்தியாவின் பிற திரைத்துறை கலைஞர்களிடமிருந்தும் கண்டன குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஒளிப்பதிவு வரைவு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தால் திரையுலகமே பெரிதும் பாதிக்கப்படும் என்று கலையுலக வல்லுனர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ALSO READ: தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News