கோடிக்கணக்கான குடிமக்களை இந்தியா வறுமையிலிருந்து மீட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவில் 2005 - 2006 மற்றும் 2015 - 2016 இடையிலான 10 ஆண்டு காலத்தில் 27 கோடியே 10 லட்சம் பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டார்.
இதன் மூலம் இந்தியாவில் வறுமை விகிதம் 55 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக குறைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். நமது குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உலகத்தை விட்டுச் செல்லப் போகிறோம், எந்த விதமான தேசத்தை அவர்கள் பெற இருக்கிறார்கள் என்பதே இப்போது கேள்வியாக இருக்கிறது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
இத்தகைய சூழ்நிலையில், நியூயார்க்கில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை திங்கள்கிழமை சந்தித்தபோது, இந்தியாவை தாம் நேசிப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். அதேபோல், இந்தியா சுதந்திரமான சமூகத்தை கொண்டது என்று டிரம்ப் தற்போது புகழாரம் சூட்டியுள்ளார்.