அமேசான் காட்டுத்தீயை அணைக்க G-7 நாடுகளின் உதவி தேவையில்லை!

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் ரூ.160 கோடி நிதியை பிரேசில் நிராகரித்துள்ளது!

Last Updated : Aug 27, 2019, 09:49 AM IST
அமேசான் காட்டுத்தீயை அணைக்க G-7 நாடுகளின் உதவி தேவையில்லை! title=

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் ரூ.160 கோடி நிதியை பிரேசில் நிராகரித்துள்ளது!

உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசானின் பெரும்பகுதி பிரேசிலில் அமைந்துள்ளது. உலக வெப்பமயமாதலைத் தடுப்பதில் இந்த மழைக்காடுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என சூழலியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் பிரேசிலில் சுமார் 73,000 காட்டுத் தீ சம்பவங்கள் நேரிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சம்பவங்களில் இதுவே அதிகம்.

இந்தக் காட்டுத் தீயால் ஏற்பட்ட புகைமண்டலத்தில் சாவ்பாலோ உள்ளிட்ட பல்வேறு பிரேசில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமேசான் மழைக்காடுகளில் பற்றியுள்ள தீயை அணைக்கும் பணியில் ராணுவத்தை ஈடுபடுத்த அந்நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ உத்தரவிட்டுள்ளார். பூமியின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைப்பதற்கு பிரேசில் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று உலகம் முழுவதும் எதிர்ப்புக் குரல் எழுபி வருகிறது.

இந்நிலையில், இதைத்தொடர்ந்து காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ G-7 அமைப்பின் உறுப்பு நாடுகள் முன்வந்துள்ளன. இது குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறுகையில், ‘அமேசான் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கூடிய விரைவில் உதவுவதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். அந்த நாடுகளுடன் எங்கள் குழு தொடர்பு கொண்டு வருகிறது. இதன் மூலம் தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவி வழங்குவது தொடர்பான உறுதியான முடிவுகள் எடுக்க முடியும்’ என்று தெரிவித்தார்.

பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் G-7 மாநாடு நடந்து வரும் நிலையில், அதில் பங்கேற்றுள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அமேசான் காட்டுத்தீ குறித்து விவாதித்தனர். இறுதியாக, அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் ரூ.160 கோடி வழங்கப்படும் என G-7 நாடுகள் அறிவித்தது. இந்த அறிவிப்பை பிரேசில் நாடு நிராகரித்துள்ளது. மேலும் அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க G-7 நாடுகளின் உதவி தேவையில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

 

Trending News