Old Pension Scheme: பணி ஓய்வுக்கு பிறகான ஓய்வூதியத்திற்கு தேசிய ஓய்வூதிய அமைப்பு, அதாவது NPS இல் முதலீடு செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். நீண்ட நாட்களாக, மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலில் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகளை ஏற்று இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் OPS -ஐ மீண்டும் அமல்படுத்தியுள்ளன. எனினும், மத்திய அரசு இன்னும் அப்படி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியத்திற்கான உத்தரவாதம்
ஓய்வு பெற்ற பிறகு, தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் நிலையான பலன் இல்லை என்றும், OPS இல், ஊழியர்கள் நிலையான ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள் என்றும் ஊழியர் சங்கங்கள் ஒப்பிட்டு கூறியுள்ளன. இந்த குறையை போக்கி, NPS இன் கீழ் உள்ள மத்திய ஊழியர்களுக்கும், ஓய்வுக்குப் பிறகு OPS இல் கிடைப்பது போன்ற சலுகைகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அரசாங்கம் உறுதியளிக்கிறது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (National Pension System) கீழ் உள்ள ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு அவர்கள் கடைசியாக பெற்ற மாதச் சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பணியாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ், பணி ஓய்வுக்கு பின், போதிய ஓய்வூதியம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற கவலை அரசு ஊழியர்களிடம் உள்ளது. இந்த கவலையை போக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இருப்பினும், 2004 க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் தற்போதைய திட்டத்தில் நல்ல வருமானத்தைப் பெறுகின்றனர். ஆனால் அதற்கு ஊழியர் டெபாசிட் செய்த பணத்தை 25-30 வருடங்களுக்கு எடுக்காமல் வைத்திருப்பது அவசியமாகும். தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் பலன்களை அதிகரிக்க, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார்.
குழு எடுத்த முடிவு என்ன?
நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன் தலைமையில் உருவான குழு, பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்ப வேண்டிய அவசியம் இல்லை என அரசுக்கு பரிந்துரை செய்தது. எனினும் தேசிய ஓய்வூதிய முறையில் சில மாற்றங்களை செய்ய அரசு முடிவெடுத்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (Old Pension Scheme) கீழ், ஓய்வுக்குப் பிறகு, ஊழியர் கடைசியாக பெற்ற ஊதியத்தில் பாதி ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக வழங்கப்படும். சம்பள கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஓய்வூதியமும் அவ்வப்போது, அதாவது 6 மாதங்களுக்கு ஒரு முறை அதிகரித்து வருகிறது. ஆனால் தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) கீழ், அரசு ஊழியர்கள் அடிப்படை சம்பளத்தில் 10% டெபாசிட் செய்கிறார்கள். அந்த நிதியில் அரசாங்கம் 14% பங்களிக்கிறது. பணி ஓய்வுக்குப் பிறகு டெபாசிட் செய்யப்படும் தொகையின் அடிப்படையில்தான் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
50% உத்தரவாத தொகைக்கான பரிசீலனை
- சோமநாதன் குழு உலக நாடுகளின் ஓய்வூதியத் திட்டங்கள் பற்றியும் நேர்த்தியான ஓய்வூதிய திட்டமாக கருதப்படும் ஆந்திரப் பிரதேச அரசின் ஓய்வூதிய திட்டம் குறித்தும் ஆய்வு செய்துள்ளது.
- ஓய்வூதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அரசு உத்தரவாதம் அளித்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் இந்தக் குழு ஆய்வு செய்கிறது.
- மத்திய அரசு, 40-45% ஓய்வூதியத்தை உத்தரவாதமாக கொடுப்பது சாத்தியம் என்று ஆய்வறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
- ஆனால் தற்போது 50% உத்தரவாதம் தருவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசிடம் ஓய்வூதிய நிதி இல்லை என்று குழு உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றனர். அரசாங்கம் புதிய அமைப்பில் இதற்கான ஒரு நிதியை உருவாக்கும். நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களுக்காக நிதியை உருவாக்குவது போல், ஒவ்வொரு ஆண்டும் அரசின் இந்த நிதியில் பணம் டெபாசிட் செய்யப்படும். இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ