பொய்யான செய்திகளை தொடர்ந்து பரப்பி வரும் பத்திரிக்கையாளர்களின் அங்கீகாரத்தை பறித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் தற்போது போலியான செய்திகள் அதிக அளவில் உலாவி வருகிறது. சில பத்திரிக்கை நிறுவனங்களும், பத்திரிக்கையாளர்களும், தங்களுக்கு வேண்டாதவர்கள் பற்றி தவறான செய்திகளை பரப்பிவிடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா போன்ற நிறுவனங்கள், மக்களின் பொழுது போக்குகள், அபிமானங்களை பட்டியலிட்டு, அவர்களுக்கு பிடித்தவாறு பொய்யான செய்திகளை பரப்பி தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி செய்து வந்தது தற்போது அம்பலமாகியது.
இதைதொடர்ந்து மத்திய அரசு பொய் செய்தி பரப்பும் பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி இது குறித்து விரைவில் விதிகளை வகுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விதிகளை மீறும் நிருபர்களை இந்திய பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் தேசிய தொலைக்காட்சி கூட்டமைப்பு ஆகியவை முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார். ஒரு முறை விதி மீறினால் 6 மாத தடை, இரண்டாவது முறையும் செய்தால் 1 ஆண்டு தடை, 3-வது முறையும் வேலையை காட்டினால் நிரந்தரமாக அங்கீகாரம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் பொய் செய்திகளை தடுக்கவும், புதிய விதிகள் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் இரானி தெரிவித்துள்ளார். இதற்காக வருங்காலத்தில், பத்திரிக்கையாளர் மற்றும் தொலைக்காட்சி போல ஒரு தனி ஆணையம் உருவாகும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.