காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். பகலில் அடித்த வெப்பத்தின் காரணமாக, இரவில் வீசும் அனல்காற்றால், இரவு தூங்க முடியாத நிலை இருந்து வந்தது.
இக்காற்றழுத்தத் தாழ்வு நிலை தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது:
தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மட்டுமே மழை பெய்யும். குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் லேசான மழை பெய்யும். ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உண்டு. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடி, மேட்டுப்பாளையம், திருச்சி விமான நிலையத்தில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.