2019 தேர்தலில் ஊடகங்களின் பங்கு பிரச்சனைக்குரியதாக இருந்ததாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவிப்பு!!
ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தேர்தல் செலவுகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையம் எஸ்.ஒய். குரேஷி கலந்துகொண்டு பேசினார். அப்போது “ பொதுவாக அரசை கேள்வி கேட்பதே ஊடகங்களில் முக்கிய வேலையாக இருக்க வேண்டும். அரசு மக்களுக்கு என்ன செய்ததது, என்ன செய்யவில்லை என்பது குறித்து ஊடகத்தினர் கேள்வி கேட்க வேண்டும். ஆனால் மாறாக அவர்கள் எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்கின்றனர், கடந்த 50 ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் என்ன செய்தார்கள் என்று ஊடகத்தினர் கேட்கின்றனர். இது தான் ஊடகத்தின் பிரதான பணியா..?” என்று குரேஷி கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர் “ தலைவர்களிடம் கடினமான கேள்விகளை எழுப்புவதற்கு பதிலாக செய்தியாளர்கள் தேன் கலந்து பேசுவது போல், இனிமையாக பேசுகின்றனர். தங்களுக்கு நேரம் ஒதுக்கி உரையாடிய தலைவர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவிக்கின்றனர். எனவே 2019 தேர்தல் நேரங்களில் ஊடகங்களின் பங்கு பிரச்சனைக்குரியதாகவும், கேள்விக்குள்ளானதாகவும் இருந்தது” என்று குரேஷி தெரிவித்தார்.