கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்பு வந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், லாலு மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பெரும் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது. நிதிஷ்குமார் முதல் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சுமூகமாக சென்ற கூட்டணி ஆட்சியில் பிளவு ஏற்பட்டது. கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜகவுடன் இணைந்து மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் நிதிஷ்குமார்.
ஆனால் பாஜகவுடன் இணைந்ததை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சிலருக்கு பிடிக்கவில்லை. மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி குறித்து தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடத்தப்பட்டன.
பாட்னாவில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியச் செயற்குழுக் கூட்டத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் என்றும், தொகுதிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தங்கள் கட்சியை வலுப்படுத்தவும், கூட்டணி குறித்து பேசவும் மாநிலங்கள் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று பீஹார் சென்ற அமித்ஷா, பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார்.
Our alliance with Nitish Kumar will continue in Bihar: BJP President Amit Shah #Patna pic.twitter.com/zBYSkjd0LI
— ANI (@ANI) July 12, 2018
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே எந்த கருத்து வேறுபாடும், பிளவுகள் இல்லை. எங்கள் கூட்டணி தொடரும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கட்சியும் இணைந்து போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெரும். மீண்டும் நாங்கள் ஆட்சி அமைப்போம் எனவும் கூறினார்.