1962-ம் ஆண்டு இந்தியா, சீனா இடையே நடந்த போருக்குப் பிறகு கடந்த 1 மாதமாக இருதரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இதையடுத்து, சிக்கிம் மாநிலத்தில் உள்ள சீன எல்லையில் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் அருகே சீன எல்லையில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக, கூடுதல் படையினரை இந்தியா குவித்துள்ளது.
இந்தியா-பூடான்-திபெத் (சீனா) எல்லைகளின் சந்திக்கும் பகுதியானது டோகா லா. அதன் அருகே லால்டன் என்ற இடத்தில் 2012-ம் ஆண்டு இந்திய ராணுவம் 2 பதுங்கு குழிகளை அமைத்தது.
இந்நிலையில், கடந்த ஜூன் 1-ம் தேதி இந்த 2 குழிகளையும் அகற்று மாறு சீன ராணுவம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் உஷார்படுத்தப்பட்டது.
அந்த பதுங்கு குழிகளை அகற்றும்படி சீனா கூறியது. அதை ஏற்க இந்தியா மறுத்தது. இதையடுத்து கடந்த மாதம் 6-ம் தேதி அந்த பதுங்கு குழிகளை சீனா இடித்துத் தள்ளியது.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. இதனால் இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.
எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து இந்தியாவும், சீனாவும் பேச்சு நடத்தின. அதில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவும், சீனாவும் எல்லையில் கடந்த ஒரு மாதமாக வீரர்களை நிறுத்தியுள்ளது. நேற்று இந்தியா கூடுதல் வீரர்களை சிக்கிம் எல்லைப் பகுதிக்கு அனுப்பியது. இது சீனாவிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தனது படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சீனா நேற்று மீண்டும் கோரிக்கை விடுத்தது. சீன பத்திரிகைகளும் இந்திய படைகள் அகற்றப்பட்டால்தான் அந்த பகுதியில் அமைதி ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளன.
ஆனால் சீனாவின் கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்து விட்டது. இதனால் இந்தியா - சீன எல்லையில் பதற்றம் அதிகரித்தபடி உள்ளது.
இதற்கிடையே டோங்லாங் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்திருப்பதாக கூறி 2 வரை படங்களை சீனா வெளியிட்டுள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் இந்திய பகுதிகளுக்கு சீனா உரிமை கொண்டாடி வருவது உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே இமாச்சல பிரதேசத்திலும், காஷ்மீரிலும் சில பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தற்போது சிக்கிமில் உள்ள பகுதிகளையும் சீனா சொந்தம் கொண்டாடுவதால் இந்தியாவுக்கு தலைவலி அதிகரித்துள்ளது.