விஜய் மல்லையாவை விசாரணைக்காக நாடு கடத்தக் கோரிய வழக்கு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு லண்டன் விரைந்தது!
இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி (ரூ. 9,000) கடனை பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார் விஜய் மல்லையா. வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கர்நாடகாவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதன்படி, விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படியும், விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் எனவும் 13 இந்திய வங்கிகள் மற்றும் மத்திய அரசு சார்பில் இங்கிலாந்து வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 2016 மார்ச் மாதம், இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற மல்லையா, பிரிட்டன் தலைநகர் லண்டனில் பதுங்கியுள்ளார். அவரை நாடு கடத்துவதற்காக, லண்டன் நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக நாடுகடத்துவது பற்றிய வழக்கில் லண்டன் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ள நிலையில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு லண்டனுக்கு விரைந்துள்ளது.
வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையா இந்தியாவுக்கு வர மறுத்ததையடுத்து அவரை நாடு கடத்துவதற்காக லண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்க உள்ள நிலையில் சிபிஐ இணை இயக்குநர் சாய் மனோகர் தலைமையில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் கொண்ட ஒரு குழு இன்று லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.