பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மதோன்கர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். வரும் மக்களவை தேர்தலில் அவர் மும்பை வடக்கு தொகுதியில் இருந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை காங்கிரஸ் கமிட்டி தலைவர் மிலின்ட் டோரா, கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சத்ரூவேதி மற்றும் ரன்தீப் சுர்ஜிவாலா முன்னிலையில் ஊர்மிளா மதோன்கரை காங்கிரஸ் கட்சிக்கு வரவேற்றார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
தன்னை காங்கிரஸ் கட்சிக்கு வரவேற்ற ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த ஊர்மிளா இன்றைய தினம் தனது வாழ்வில் ஒரு முக்கியமான நாள் எனவும், இன்று தன் வாழ்வின் ஒரு புதிய அத்தியாம் துவங்குகிறது எனவும், புதியதொரு மாற்றத்திற்கான அரசியல் பாதையில் இணைவது மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார். மேலும் தனது நினைவுகள், செயல்பாடுகள் எப்போதும் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களது கொள்கைகளையே பின்பற்றும் எனவும், தற்போது தான் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளது தலைவர்களின் கொள்கைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காகவே எனவும் தெரிவித்தார்.
Congress President @RahulGandhi welcomes Smt. Urmila Matondkar to the Congress Party. pic.twitter.com/4iZHAy9Nn8
— Congress (@INCIndia) March 27, 2019
பொதுவாக சினிமா பிரபலங்களை அரசியல் கட்சிகள் விளம்பரத்திற்காகவே அழைக்கும் என கூறப்படுகிறது. இந்த வரிகளை நான் மறுக்கவில்லை, ஆனால் நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது கட்சியின் விளம்பரத்திற்காகவோ அல்லது என்னுடைய விளம்பரத்திற்காகவோ இல்லை என்பதை விரைவில் நிரூபிப்பேன் எனவும் ஊர்மிளா இந்நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
மும்பை காங்கிரஸ் கமிட்டி தலைவர் மிலின்ட் டோரா பேசுகையில்., ஊர்மிளாவை எனக்கு கடந்த பல வருடங்களா தெரியும். அவர் மற்ற நடிகளை நடிகர்களை போல் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துபவர் இல்லை. நாட்டின் நடப்புகளை அறிந்து அதற்கான மாற்றத்தை கொண்டுவர துடிக்கும் ஆளுமைகளில் ஒன்று என பெருமிதம் தெரிவித்தார்.
இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கும் ஊர்மிளா, காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடக்கு தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் போட்டியிட, நடிகை நக்மா உட்பட மேலும் சிலரின் பெயர் காங்கிரஸ் சார்பில் பரிசீலிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊர்மிளா கட்சியில் சேர சம்மதித்ததால் அவரையே வேட்பாளராகக் களமிறக்க கட்சி முடிவு செய்துள்ளது. இதே தொகுதியில் கடந்த 2004-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை அடுத்து மற்றொரு நட்சத்திர வேட்பாளர் இப்போது இத்தொகுதியில் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.