தெலங்கானாவில் தனது மகளின் தற்கொலைக்கு நீதி கேட்க சென்ற தந்தையை போலீசார் எட்டி உதைத்து அடிக்கும் வீடியோ பலரையும் ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது!!
தெலுங்கானா மாநிலம் பட்டஞ்சேருவில் உள்ள தனியார் நாராயண் ஜூனியர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர் சந்தியாராணி (16 வயது) சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள தனது கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று தெலுங்கானாவில் சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்துபோன 16 வயது கல்லூரி மாணவரின் உடலைக் கொண்டு செல்லும்போது, மகள் இறந்த துக்கத்திலிருந்த தந்தையை அருகிலிருந்த போலீஸ்காரர் ஒருவர் தனது பூட்ஸ் காலால் உதைக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கானாவின் சங்க ரெட்டி மாவட்டத்தில் தான் இந்த மனதை உலுக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது .
வெளியான இந்த வீடியோவில், ஒரு குழுவாக உள்ள காவல்துறையினர் இரும்பு சவப்பெட்டியில் ஒரு இளம் பெண்ணின் உடலை அதி வேகமா சாலையில் தள்ளிச்செல்கின்றனர். அவ்வாறு அவர்கள் அந்த பெட்டியைத் தள்ளிச்செல்லும்போதும் அவர்களைத் தடுக்க முற்படுகிறார் இறந்து அந்த சவப்பெட்டியில் உள்ள பெண்ணின் தந்தை. அவ்வாறு அவர் அந்த காவலர்களைத் தடுக்க முற்படும்போது நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை அருகிலிருந்த காவலர் ஒருவர் தனது பூட்ஸ் கால்களால் எட்டி உதைக்கிறார்.
மனதை உருக்கும் இந்த சம்பவம் நடக்கும்போது, கீழே விழுந்த அந்த மனிதரைப் போலீசிடம் இருந்த காக்க அருகில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற சேலையில் நின்றிருந்த ஒரு பெண் ஓடி வருகிறார் (அந்த மனிதரின் மனைவியாகக் கருதப்படுகிறது). இந்நிலையில் தற்போது சங்க ரெட்டி மாவட்டத்தில் பொறுப்பில் இருக்கும் மேடக் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், அவ்வாறு நடந்துகொண்ட அந்த போலீஸ் அதிகாரி தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் மீது துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.