யோகாவுக்கு மதிப்பு அளிக்காத காரணத்தால் தான், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், காங்., கட்சி படுதோல்வியை சந்தித்தது என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்!
யோகாவுக்கு மதிப்பளிக்காத காரணத்தாலேயே தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவிக்கையில்.,
மக்களுடன் மக்களாக இருந்து யோகா செய்த முதல் பிரதமர், நரேந்திர மோடி தான். அவரைப்போலவே பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரும் யோகா செய்து வருகின்றனர்.
இதற்கு முன்பு முன்னாள் பிரதமர்களான ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரும் ரகசியமாக யோகா செய்தனர். ஆனால் நேரு, இந்திரா ஆகியோருக்கு பின் வந்த அவர்களது குடும்பத்தினர், யோகா செய்யவில்லை. யோகாவிற்கான மரியாதையும் அளிகவில்லை.
இதன் காரணத்தால் தான் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. ஏனெனில், யோகா என்பது கடவுளால் நேரடியாக ஆசீர்வதிக்கப்பட்ட கலை என தெரிவித்தார்.
மேலும் யோகா என்பது நமது மிகப்பெரிய சித்தாந்தம், யோகா கலையை நாம் அனைவரும் ராஷ்டிர தர்மமாக ஏற்க வேண்டும். உணவுப் பொருள்களில் கலப்படம் மேற்கொள்ளப்படும் விவகாரத்தில் தரக்கட்டுப்பாட்டு அமைப்புகள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும், வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும்.
உணவுப் பொருள்களில் கலப்படம் மேற்கொள்ளப்படுவதை தடுக்க சீனா போன்ற நாடுகளில் கடுமையான சட்டங்கள் உள்ளன. குறிப்பாக, சீனாவில் இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அத்தகைய கடுமையான சட்டங்கள் இல்லை. எனவே, குறைந்தது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையிலாவது சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். நெய், மருந்துகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றில் கலப்படம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோரின் தலைமையின்கீழ், அரசியலமைப்பு சட்ட விதிகள் 370, 35A ஆகிய விவகாரங்களிலும், ஒரே தேசம் ஒரே சட்டம், ஒரே தேசம் ஒரே தேர்தல், முத்தலாக் மசோதா ஆகிய விவகாரங்களில் சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன் எனவும் குறிப்பிட்டு பேசினார்.