மோடிக்கு எதிரான மேலும் 2 புகார்களில் முகாந்திரம் இல்லை எனக்கூறி காங்கிரஸ் அளித்த புகாரில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரட்சாரங்கள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் கொடுக்கப்பட்ட மேலும் 2 புகார்களில் முகாந்திரமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவில் கடந்த மாதம் 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியபோது, புதிய வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பாலாகோட் விமானப்படை தாக்குதல் கதாநாயகர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, மகாராஷ்டிர மாநிலம், லதூரில் நடைபெற்ற கூட்டத்திலும் மேற்கண்ட வேண்டுகோளை மோடி விடுத்தார்.
இதுகுறித்தும், குஜராத் மாநிலம், ஆமதாபாதில் கடந்த மாதம் 23 ஆம் தேதி மோடி நடத்திய பிரமாண்ட பேரணி குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்திருந்தது. அதில் மோடி தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறிவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது.
இந்த புகார்கள் குறித்து ஆய்வு நடத்திய தேர்தல் ஆணையம், மேற்கண்ட 2 சம்பவங்களிலும் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மோடி மீறவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதையும் சேர்த்து, மோடிக்கு எதிரான 8 புகார்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை முடிவெடுத்துள்ளது. மேலும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு எதிரான 2 புகார்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக கொடுக்கப்பட்ட ஒரு புகார் மீதும் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.