22 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்

22 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 19, 2018, 08:03 PM IST
22 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் title=

2018 ஜூன் மாதத்திற்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து பாஜக விலகியது. இதனால் மக்கள் ஜனநாயக கட்சியிடம் (பிடிபி) பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியை இழந்தது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை முடக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.

கடந்த ஆறு மாதங்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளது. ஆளுநர் ஆட்சி இன்று (டிசம்பர் 19) நிறைவடைகிறது. இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மாநிலத்தின் ஆளுநர் சத்யபால் மாலிக் ஏற்கனவே மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்த பரிந்துரையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பி வைத்தது மத்திய அரசு.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையில், இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார். இதன்மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இரண்டாவது முறையாக மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது.

1992 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News