தேசிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!
பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத பாகுபாட்டால் வெளியேறி வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பா.ஜனதா தனது பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 1955 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016 ஆம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது.
இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது. ஆகவே, புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. இதற்கு மத்திய மந்திரிசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிராஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது பேசிய அமித்ஷா, குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என தெரிவித்தார். மசோதாவில் பாகுபாடுகள் காட்டப்படவில்லை என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில்..... குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல. இந்த மசோதா, 0.001 சதவீதம் கூட இந்தியா சிறுபான்மையினருக்கு எதிரானது என குறிப்பிடும் வகையிலான எதுவும் இல்லை. இந்த மசோதாவால் 1.75 கோடி மக்கள் பயனடைவர். அதனால் இதனை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதனை ஏற்காததால் தொடர்ந்து காரசார விவாதம் நடைபெற்றது.
இந்த மசோதா மீது இன்றே ஓட்டெடுப்பு நடத்தி நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த மசோதாவிற்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.