அன்பினால் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை பிரதமர் மோடி உணர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!
நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைப்பெற்று வருகிறது., தற்போது வரை 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் நாளை 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கிடையில் அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று மத்தியபிரதேசம் மாநிலம் சுஜால்பூர் பகுதியில் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அன்பினால் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை பிரதமர் மோடி உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேசம் மாநிலத்தை பொருத்தவரையில் ஏப்ரல் 29 மற்றும் மே 6 என 2 கட்டங்களாக மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக மே 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இங்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சுஜால்பூர் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் நாட்டுப்புற பாடகர் பிரஹலாத் திஸ்பியனை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்., தற்போது நடந்து கொண்டிருக்கும் மக்களவை தேர்தல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் எண்ணங்களுக்கு இடையிலான போராட்டம் ஆகும். பாஜக, ஆர்எஸ்எஸ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் எங்கள் குடும்பத்தை அடியோடு வெறுக்கின்றனர். மக்களிடமும் வெறுப்பை ஏற்படுத்தும் விதத்தில் பேசி வருகின்றனர்.
இதனை அகற்றுவது தான் என் வேலை. மோடி என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கடுமையான கோவத்துடனும், வெறுப்புடனும் பேசி வருகிறார். ஆனால், நான் அவரை கட்டி அணைத்து அன்பு காட்டினேன். நீங்கள் இந்நாட்டின் பிரதமர், உங்களிடம் இருக்கும் தனிப்பட்ட வெறுப்புகளை நீக்கி அன்புடன் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை உணர வேண்டும்.
வெறுப்பினை அன்பினால் மட்டுமே கலைய முடியும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.