Republic Day 2025 Parade Full Details: 1950ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுக்கூறும் வகையில், ஆண்டுதோறும் ஜன. 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1947ஆம் ஆண்டே இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்திருந்தாலும், அப்போது அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வரவில்லை.
1950ஆம் ஆண்டு ஜன.26ஆம் தேதி அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தபோதே, இந்த உலகிற்கு இந்திய நாடு, தன்னை ஒரு இறையாண்மை கொண்ட, ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக அறிவித்துக்கொண்டது எனலாம். 76வது குடியரசு தின விழா (76th Republic Day) தலைநகர் டெல்லியில் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் குறித்த அனைத்து விவரங்களையும் இங்கு விரிவாக காணலாம்.
குடியரசு தினம் 2025: அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி
டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடியரசு தின 2025 நிகழ்வை தொடக்கிவைப்பார். பின்னர், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு (Indian President Droupadi Murmu) இன்று காலை ராஷ்டிரபதி பவனில் இருந்து கடமை பாதைக்கு ஒரு சம்பிரதாய வாகனத்தில் வருகை தருவார். அங்கு ஆயுதப்படைகள், துணை ராணுவப் படைகள், துணை சிவில் படைகள், என்சிசி மற்றும் என்எஸ்எஸ் பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார்.
மேலும் படிக்க | குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு -வின் குடியரசு தின உரையின் முக்கிய அம்சங்கள்..!
குடியரசு தினம் 2025: 31 அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி
குடியரசு தினம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றுவார். 76வது குடியரசு தினத்திற்கு இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ (Indonesia President Prabowo Subianto) சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். இதை தொடர்ந்து, காலை 10.30 மணியளவில் அலங்கார வாகனங்களின் அணிவகுப்புகள் (Republic Day 2025 Parade) தொடங்கும்.
தேர்வுசெய்யப்பட்ட பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு அமைச்சகங்கள்/துறைகளைின் 31 அலங்கார வாகனங்கள் அணிவகுப்பில் பங்கேற்கின்றன. இந்திய அரசியலமைப்பு இயற்றப்பட்ட 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், இந்தாண்டு குடியரசு தின விழாவுக்கு, 'பொன்னான இந்தியா: பாரம்பரியம் மற்றும் மேம்பாடு' என்ற கருப்பொருளுடன் அணிவகுப்புகள் நடைபெற இருக்கின்றன. இதில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு இந்தாண்டு இடம்பெறாது.
குடியரசு தினம் 2025: அரசுப் பள்ளிகளின் இசைக்குழுக்கள்
இதன் பின், இந்திய ஆயுதப்படை வீரர்களுடன், இந்தோனேசியாவின் 160 பேர் கொண்ட அணிவகுப்புக் குழுவும், 190 பேர் கொண்ட இசைக்குழுவும் அணிவகுப்பில் பங்கேற்கின்றன. மேலும், இந்தாண்டு குடியரசு தின விழாவில் முதல்முறையாக அரசுப் பள்ளிகளின் இசைக்குழுக்களும் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளன. ஜார்க்கண்ட், சிக்கிம், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் 3 அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட இசைக்குழுவினரும் இன்றைய அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.
குடியரசு தினம் 2025: நேரலையை எப்படி பார்ப்பது?
இதன் நேரலை காலை 9 மணிக்கு தொடங்கும். தொலைக்காட்சியில் பார்ப்பவர்கள் தூர்தர்ஷன் சேனல் மூலம் நேரலையை காணலாம். யூ-ட்யூப் மூலம் பார்ப்பவர்கள் தூர்தர்ஷன் நேஷ்னல் என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தின் வழியாகவும், பிரசார் பாரதி யூ-ட்யூப் சேனல் வழியாகவும் நேரலையை பார்க்கலாம். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திலும் நேரடி ஒளிபரப்பு இடம்பெறும். மேலும், நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்தின் யூ-ட்யூப் பக்கத்திலும் நீங்கள் நேரலையை காணலாம்.
குடியரசு தினம் 2025: தமிழ்நாட்டிலும் அணிவகுப்பு நிகழ்ச்சி
குடியரசு தின விழா டெல்லியில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலும் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார்கள். இதன் நேரலையை TN DIPR யூ-ட்யூப் சேனலில் பார்க்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ