இந்தியாவில் நாவல் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்., இந்தியன் ரிசர்வ் வங்கி ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு வியாழக்கிழமை கேட்டுக் கொண்டது.
மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள தனது மத்திய அலுவலகம் அல்லது தலைமையகத்தில் பணிபுரிபவர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் ரிசர்வ் வங்கி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு ஒட்டுமொத்த எண்ணிக்கையானது 172-ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி உத்தரவு வெளியாகியுள்ளது. மேலும் மத்திய வங்கியின் நடவடிக்கைகள் வைரஸைக் கட்டுப்படுத்த மும்பை அரசாங்கம் பிறப்பித்த நிர்வாக உத்தரவுக்கு இணங்க இடம்பெற்றுள்ளது.
இதனிடையே நிதி ஸ்திரத்தன்மை தொடர்பான அனைத்து அவசரக் கூட்டங்களும் வழக்கம் போல் நடக்கும் என்றும், இந்த கூட்டங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்யப்படும் என்றும் ரிசர்வ் வங்கி உறுதியளித்தது.
மகாராஷ்டிராவில் இதுவரை கொரோனாவால் பாத்தித்தோர் எண்ணிக்கை 45-னை எட்டியுள்ளது. இதனையடுத்து தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக முதல்வர் உத்தவ் தாக்கக்கரேயின் அரசாங்கம் மக்களை முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது, அலுவலகங்களில் பணி ஊழியர்களைக் குறைக்க முதலாளிகளைக் கேட்டுக் கொண்டது, மற்றும் வெகுஜனக் கூட்டங்கள் அனைத்தையும் நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் அரசாங்கம் மாநிலம் முழுவதும் வெப்பத் திரையிடலை அதிகரித்துள்ளது மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உலகளவில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது, மற்றும் 8,500-க்கும் அதிகமானவர்களைக் கொன்றுள்ளது. இதில் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஈரான் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் சில ஆகும்.
இந்தியாவைப் பொருத்தவரை, பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது படிப்படியாக தினசரி அடிப்படையில் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.