நோய்டா: ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைகள் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர் மற்றும் ஆறு மூத்த பத்திரிகையாளர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய தலைநகரில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது, இவர்களால் செய்யப்பட்ட டிஜிட்டல் ஒளிபரப்பு மற்றும் பகிரப்பட்ட சமூக ஊடக பதிவுகள் காரணமாக வன்முறை அதிகரித்ததாக ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக செக்டர் 20 காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிருணால் பாண்டே, ராஜ்தீப் சர்தேசாய், வினோத் ஜோஸ், ஜாபர் ஆகா, பரேஷ் நாத் மற்றும் அனந்த் நாத் ஆகியோர் FIR-ல் பெயரிடப்பட்ட மூத்த பத்திரிகையாளர்கள் ஆவர். அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் FIR-ல் பெயரிடப்பட்டுள்ளார். "ஆம், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று நொய்டா (Noida) காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான பி.டி.ஐ-யிடம் தெரிவித்தார்.
இந்திய தண்டனைச் சட்டம் 124 (தேசத்துரோகம்), 295A (குறிப்பிட்ட வகுப்பு அல்லது மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கில், மத நம்பிக்கைகளை அவமதிக்கும் நோக்கில் வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்களை செய்வது) 504 (அமைதியைக் கலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது) 506 (கிரிமினல் நோக்கத்துடன் மிரட்டல்), 34 (பொதுவான நோக்கத்தை மேம்படுத்துவதற்காக பல நபர்கள் சேர்ந்து செய்யும் தகாத செயல்கள்) 120B (குற்றவியல் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பொருத்தமான விதிகளின் கீழும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நோய்டா காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 26 அன்று, மத்திய அரசின் மூன்று வேளான் சட்டங்களை (Farm Laws) ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எடுத்துக்காட்டுவதற்காக உழவர் சங்கங்கள் ஏற்பாடு செய்த டிராக்டர் பேரணியில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
டிராக்டர்களை ஓட்டிச்சென்ற எதிர்ப்பாளர்கள் பலர் செங்கோட்டையை (Red Fort) அடைந்து அங்கு வன்முறையில் ஈடுபட்டனர். சிலர் செங்கோட்டையின் கோபுரங்களில் மதக் கொடிகளை ஏற்றினர். செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று பிரதமரால் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தினத்தன்று அமைதியான முறையில் நடத்தப்பட அனுமதி வழங்கப்பட்டிருந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே விவசாயிகள் தங்கள் பேரணியை துவக்க முயற்சித்ததும், டெல்லியின் பல இடங்களிலும் போராட்டம் செய்ய முற்பட்டதும் கடும் குழப்பத்துக்கும் வன்முறைக்கும் வழி வகுத்தது.
மத்திய தில்லியில் (Delhi) உள்ள ITO-வில், தடுப்புகளை உடைத்து, காவல்துறை வீரர்களை தாக்கி, காவல் துறை வாகனங்களை சூறையாடிய விவசாயிகளின் ஒரு குழுவின் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். விவசாயிகள் குழு செங்கோட்டையை அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டது.
விவசாயிகளின் போராட்டத்தின் போது, தில்ஷாத் கார்டன், செங்கோட்டை மற்று பல இடங்களில் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர்.
ALSO READ: Budget 2021: சாமானியரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா? எது விலை குறையும், எது கூடும்?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR