தேங்கும் ரஷ்ய கச்சா எண்ணெய் - மோடிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்!

உக்ரைன் மீது படையெடுத்ததால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. 

Written by - Arunachalam Parthiban | Last Updated : Mar 9, 2022, 12:15 PM IST
  • உக்ரைன் ரஷ்யா நாடுகளுக்கு இடையே வலுக்கும் போர்
  • ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்த அமெரிக்கா
  • கச்சா எண்ணெய் விற்பனைக்கு இந்திய சந்தையை குறிவைக்கும் ரஷ்யா
தேங்கும் ரஷ்ய கச்சா எண்ணெய் - மோடிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்! title=

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 14 நாட்களாக தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தாலும் உக்ரைனில் தாக்குதலுக்குள்ளாகும் நகரங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற மனிதாபிமான அடிப்படையில் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதையடுத்து உக்ரைன் தலைநகர் Kyiv, Chernihiv, Sumy, Kharkiv மற்றும்  Mariupol உள்ளிட்ட 5 நகரங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி போலந்து, ஸ்லோவாக்கியா, மால்டோவா, ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். போர் காரணமாக இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையால் அந்நாட்டின் மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் மூலம் இதுநாள் வரை கடும் பொருளாதார தடைகளுக்குள்ளான நாடுகள் பட்டியலில் வட கொரியா மற்றும் ஈரானை பின்னுக்கு தள்ளி ரஷ்யா முதலிடம் பிடித்துள்ளது. இருப்பினும் ரஷ்யாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் முன்வராமல் இருந்தன. வளைகுடா நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடு ரஷ்யா. எனவே ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு தடை விதித்தால் சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல் விலை ஜெட் வேகத்தில் உயரும். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டி அரசாங்கங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் சூழல் ஏற்படும். இதனை உணர்ந்ததாலேயேரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க மேற்குலக நாடுகள்  தயக்கம் காட்டி வந்தன. 

Crude Oil

இந்த தயக்கத்தை முதல் நாடாக தகர்த்தெரிந்துள்ளது அமெரிக்கா. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து எண்ணெய் பொருட்கள் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் அந்நாட்டில் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்பதையும் அதிபர் ஜோ பைடன் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சூழலில் தங்கள் நாட்டில் தேக்கமடையும் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய சீனா மற்றும் இந்திய சந்தையை குறிவைத்துள்ளது ரஷ்யா.  உலகின் மூன்றில் ஒரு பங்கு மனித வளத்தை கொண்டுள்ள நாடுகள் சீனா மற்றும் இந்தியா. எனவே போரினால் இழந்த பொருளாதாரத்தை மீட்க இந்த இரு நாடுகளையும் பெரிதும் நம்பியுள்ளது ரஷ்யா. அதற்கேற்றார் போல் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி நடுநிலை வகித்து வருகிறது இந்தியா. 

Petrol

இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய அமெரிக்கா முட்டுக்கட்டை போடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரம் ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணையை கொள்முதல் செய்வதில் அமெரிக்கா இந்தியாவுக்கு அனுகூலமாக நடந்துகொண்டதையும் நினைவு கூற வேண்டும். ஒரே நேரத்தில் சீனா - இந்தியா எனும் இரு பெரும் நாடுகளை பகைத்துக்கொள்ள அமெரிக்கா விரும்பாது என்பதால் விரைவில் இந்திய சந்தையில் ரஷ்ய கச்சா எண்ணெய் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யலாம். இது நிறைவேறினால் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி கூறியது போல் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

மேலும் படிக்க | உக்ரைன் அதிபர் எங்கே இருக்கிறார்? அவர் வெளியிட்ட வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News