வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து, தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிடுகிறார்கள்.
வருகிற ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி, மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிட முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் நாங்கள் 100 நாட்கள் போராடினோம். ஆனால் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. எனவே பிரதமர் மோடி போட்டியிட உள்ள வாரணாசி தொகுதியில் தமிழக விவசாயிகள் 111 பேர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
என்று தெரிவித்தார்.