கடந்த வெள்ளிக்கிழமை சோராபுதீன் மற்றும் துளசி பிரஜாபதி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் குற்றவாளி அல்ல எனக்கூறி மும்பை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. 2005 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று அகமதாபாத்தில் குஜராத் காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட என்கவுண்டரில் சோராபுதீன் சேக் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர் அவரது மனைவியும் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்.
சோராபுதீன் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக அவர் சகோதரர் ரூபாபுதீன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த வந்த மும்பை சிபிஐ நீதிமன்றம் நேற்று, இந்த வழக்கில் தொடர்புடைய 22 பேரின் மீதான குற்றம்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி, அவர்களை விடுவித்தது. ஏற்கனவே இந்த வழக்கில் தற்போதைய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, டி.ஜி வன்சாரா உட்பட 16 பேரை விடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுக்குறித்து கூறிய டி.ஜி வன்சாரா, "சோராபுதீன் என்கவுண்டரில் கொல்லப்படாமல் இருந்திருந்தால், தற்போதைய பிரதமரும், முன்னாள் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை கொன்றுருப்பார். குஜராத் போலீஸ் சோராபுதீனை ஷூட்-அவுட் செய்யாமல் இருந்திருந்தால் நரேந்திர மோடியை கொல்ல வேண்டும் என்ற பாகிஸ்தானின் நோக்கம் வெற்றி பெற்று இருக்கும். குஜராத் மாநிலம் மேலும் ஒரு காஷ்மீர் மாநிலமாக மாறி இருக்கும்.
குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போலீசார், குஜராத்தில் நடைபெற்ற பிஜேபி அரசுக்கும், மத்தியில் நடைபெற்ற காங்கிரஸ் அரசுக்கும் இடையில் நடந்த அரசியலில் சிக்கி நாங்கள் பலகீனப்படுத்தப்பட்டோம்.
சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பல நாட்களுக்கு முன்னர் நான் கூறியது உண்மை என்பதை நிரூபிக்கப் பட்டு உள்ளது. இந்த என்கவுண்டர் அரசின் அழுத்தத்தால் செய்யப்பட்டது இல்லை. நரேந்திர மோடியைக் கொல்லும் நோக்கத்தில் செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அழிக்கவே என்கவுண்டர் நடத்தப்பட்டது.
சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் நிரூபணம் ஆகி உள்ளது நான் மற்றும் எங்களுடைய டீம் சரியானது என்று, ஏனென்றால் நாங்கள் உண்மையின் பக்கம் இருந்தோம் என டி.ஜி வன்சாரா கூறியுள்ளார் .