நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ரூபாய் 10 கோடி கடனை திருப்பி தராததால் இத்திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் ஹீரோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் 10 கோடி ரூபாய் கடன் பாக்கி திருப்பி அளிக்கும் வரையில்., ஹீரோ படத்தை வேறு தலைப்பில் வெளியிடவும், வேறு நிறுவனங்களின் பெயரில் வெளியிடவும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ திரைப்படத்தை வரும் டிசம்பர் 20-ஆம் தேதி வெளியிட 24 ஏ.எம் பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் 24 ஏ.எம் பிலிம்சின் பங்குதாரர்களான ராஜா, பிரபு, ஜெயதேவி ஆகியோர் டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் கிளட்டஸ் பேட்ரிக் ஹென்ரி என்பவரிடம் இருந்து கடந்த 2018-ஆம் ஆண்டு ரூபாய் 10 கோடி கடனாக பெற்றுள்ளதாக தெரிகிறது.
ஒப்பந்தத்தின் படி ஆண்டுக்கு 24% வட்டியுடன் 10 மாதங்களில் திருப்பி செலுத்துவதாகக் கூறிய நிலையில், இதுவரை பணத்தை திருப்பி செலுத்தாத காரணத்தால் 24 ஏ.எம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ஹீரோ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வாதிகள் நீதிமன்ற உதவியை நாடியுள்ளனர்.
மேலும் வாங்கிய கடனை 24% வட்டியுடன் திரும்பி செலுத்தக்கோரியும் தங்கள் வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ஹீரோ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடைவிதித்து வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.