'சைஃப் அலி கான் முதலில் கேட்டது இதுதான்' ஆட்டோ ஓட்டுநர் கூறிய பரபரப்பு தகவல்கள்

Saif Ali Khan: சைஃப் அலி கானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர், அன்று நடந்தது என்ன என்பது குறித்து ஊடகம் ஒன்றிடம் பேசி உள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 17, 2025, 08:11 PM IST
  • சைஃப் அலி கானை 6 முறை கத்தியால் குத்தி உள்ளனர்.
  • சைஃப் அலி கானை தாக்கியவரை இன்று போலீசார் பிடித்துள்ளனர்.
  • சைஃப் அலி கான் மருத்துவமனைக்கு காரில் செல்லாமல் ஆட்டோவில் சென்றார்.
'சைஃப் அலி கான் முதலில் கேட்டது இதுதான்' ஆட்டோ ஓட்டுநர் கூறிய பரபரப்பு தகவல்கள் title=

Saif Ali Khan Latest News Updates: பிரபல பாலிவுட் நடிகரின் சைஃப் அலி கானின் மும்பை பாந்த்ரா அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து ஒருவர் கொள்ளை அடிக்க முயற்சித்தது மட்டுமின்றி, சைஃப் அலி கானை 6 முறை கத்தியால் குத்திய சம்பவம் நாட்டையே உலுக்கியது எனலாம். மொத்தம் 12 மாடிகள் கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில், 4 மாடிகள் சைஃப் அலி கானுக்கு சொந்தமானவை. 

வீட்டிற்குள் புகுந்த நபரை நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பணியாளர் ஒருவர் பார்த்துள்ளார். உடனே பணியாளர் எழுப்பிய சத்தத்தை கேட்டு நடிகர் சைஃப் அலி கானும் அங்கு வந்துள்ளார். அப்போது அந்த நபரை பணியாளரும், சைஃப் அலி கானும் தடுக்க முயன்ற போது இருவரையும் காயப்படுத்திவிட்டு அந்த நபர் தப்பிச்சென்றார். அதில் சைஃப் அலி கானை 6 முறை அந்த நபர் கத்தியால் குத்தி உள்ளார். பணியாளருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சைஃப் அலி கான் மீது தாக்குதல்: ஒருவர் கைது

உடனே சைஃப் அலி கானின் கார் தயாராகவில்லை என்பதால் அவரது மகன் இப்ராஹிம் அலி கான் உதவியுடன் ஆட்டோவில் அவரது வீட்டில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு சைஃப் அலி கான் அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சைஃப் அலி கான் கத்திக்குத்து சம்பவம்; வீட்டுப் பணிபெண் கூறும் திடுக்கிடும் தகவல்கள்

சைஃப் அலி கானை தாக்கிவிட்டு தப்பியோடிய அந்த நபரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடியபோது அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து சிசிடிவி கேமராவில் அவரின் முகம் தெளிவாக பதிவானது. அதன் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு சம்பவம் நடந்து 30 மணிநேரத்தில் அந்த நபரை கண்டுபிடித்துள்ளனர். 

சைஃப் அலி கான் மீது தாக்குதல்: போலீசார் விசாரணை

மேலும், இந்த சம்பவத்தில் குற்றவாளிக்கும், சைஃப் அலி கான் வீட்டில் பணியாற்றும் பணியாளர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். காரணம், எந்த கேமராவிலும் சிக்காமலும் அந்த நபர் சைஃப் அலி கான் வீட்டிற்கு செல்ல கண்டிப்பாக அவருக்கு ஒருவர் உதவியிருக்க வேண்டும் என்றும் போலீசார் நம்புகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, சைஃப் அலி கான் மருத்துவமனைக்கு காருக்காக காத்திருக்காமல் உடனடியாக ஆட்டோவில் சென்றதே அவர் மீண்டு வருவதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில், சைஃப் அலி கானை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் அச்சம்பவம் குறித்து ஊடகம் ஒன்றிடம் பேசி உள்ளார்.

மேலும் படிக்க | சயிஃப் அலிகானை தாக்கியவன் யார்? வெளியானது புகைப்படம்..ரூ.1 கோடி கேட்டது அம்பலம்..

சைஃப் அலி கான் மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநர் பேசியவை

அந்த ஆட்டோ ஓட்டுநர் கூறுகையில்,"நான் அந்த பகுதி வழியாக சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்து ஒரு சத்தம் கேட்டது. ஒரு பெண்மணி ஆட்டோவை நிறுத்தும்படி வாசல் பக்கத்திலிருந்து உரக்க குரலில் கத்தினார். எனக்கு முதலில் அது சைஃப் அலி கான் என தெரியவில்லை. சாதாரணமாக ஏதோ அடிதடி சண்டனை என்றே நினைத்தேன்.

சைஃப் அலி கான் நேரடியாக ஆட்டோவை நோக்கி நடந்து வந்து, அவரே உள்ளே அமர்ந்துகொண்டார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவருடன் ஒரு சிறு குழந்தையும், மற்றொருவரும் வந்தனர். அவர் ஆட்டோவில் உட்கார்ந்து உடனே என்னிடம்,"மருத்துவமனைக்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும்" என்றுதான் கேட்டார்.

நாங்கள் 8-10 நிமிஷத்திற்குள் மருத்துவமனைக்கு சென்று விட்டோம். அவரது கழுத்திலும் முதுகிலும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவர் அணிந்திருந்த வெள்ளை குர்தா சிவப்பு நிறத்தில் மாறிவிட்டது. அந்தளவிற்கு அவருக்கு ஏகப்பட்ட ரத்தம் போயிருந்தது. அவர்களிடம் நான் கட்டணம் எதையும் வாங்கவில்லை. அவருக்கு உதவி செய்ததே மகிழ்ச்சிதான்" என்றார்.

சைஃப் அலி கான் மீது தாக்குதல்: மருத்துவர்கள் கூறுவது என்ன?

முன்னதாக, சைஃப் அலி கான் இன்னும் சில நாள்களில் வீடு திரும்புவார் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய லீலாவதி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர் நிதின் டாங்கே,"சைஃப் அலி கான் உடலின் முன்னேற்றத்தை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம், எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அவர் சிறப்பாக செயல்படுகிறார். அவரது தற்போதைய உடல்நலனின்படி, தொடர்ந்து ஓய்வில் இருக்க அறிவுறுத்தி உள்ளோம். தேவைப்பட்டால், இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர் வீடு திரும்புவார்" என்றார். 

சைஃப் அலி கானுக்கு மொத்தம் 3 காயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது. அதாவது, கையில் இரண்டு காயங்களும் மற்றும் கழுத்தின் வலது பக்கத்தில் ஒன்றும் ஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய பகுதியாக முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. முதுகுதண்டின் உள்ளே ஒரு கூர்மையான பொருள் சிக்கிக் கொண்டது. அது மிகவும் ஆழமாகச் சென்று முதுகெலும்பைத் தொட்டுள்ளது என்றும் ஆனால் அது முதுகெலும்பை சேதப்படுத்தவில்லை என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

மேலும் படிக்க | சைஃப் அலி கான் மீதான தாக்குதல்: கத்தியால் குத்தியவரை வளைத்து பிடித்த போலீசார்... சிக்கியது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News