மருத்துவ படிப்பு... அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட முக்கிய தகவல்

மருத்துவ, பொறியியல் படிப்பில் அருந்ததியர் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக அமைச்சர் மதிவேந்தன் புள்ளி விவரங்களுடன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 17, 2025, 02:53 PM IST
  • அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட அறிக்கை
  • தமிழ்நாட்டு அருந்ததியர் உள்ஒதுகீட்டு ரிசல்ட்
  • அதிக மாணவர்கள் படிப்பதாக டேட்டாவுடன் தகவல்
மருத்துவ படிப்பு... அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட முக்கிய தகவல் title=

இது தொடர்பாக அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பொறியியல், மருத்துவம் படிப்புகளில் அருந்ததியர் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், "திராவிட இயக்கமும் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாறும் பிரிக்க முடியாத உறவை கொண்டவை. நீதிக்கட்சி அரசு வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை வெளியிட்டு, இந்திய சட்டமன்ற வரலாற்றில் முதன்முதலில் இடஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தியது. 1928-ஆம் ஆண்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டம் நிரந்தரமாக்கப்பட்டது. இதனால், அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு உரிமை அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கிடைத்தது. அந்த நீதிக் கட்சியின் நீட்சிதான் திமுக அரசு. 

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களை கல்வி, பொருளாதார, சமூக, அரசியல் தளத்தில் வலிமையுள்ளவர்களாகவும், வளர்ச்சி அடைந்தவர்களாகவும் உயர்த்த வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் முதன்மை இலட்சியமாகும். இந்த இலட்சியப் பயணத்திற்கு பாதை அமைத்துதரும் இடஒதுக்கீட்டு உரிமைகள் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்த காலமெல்லாம் உணர்வுப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது வரலாறு. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் சமூகநீதி உரிமைகளை நிலைநாட்டும் வகையில் திமுக அரசு பல்வேறு வகையான இடஒதுக்கீட்டு சட்டங்களை இயற்றி வரலாறு படைத்துள்ளது.

சமூகத்தின் கடைநிலையில் இருப்பவர்களுக்கும் இடஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்கவேண்டும் எனும் சமத்துவ நோக்கோடு பட்டியலின மக்களிடையே மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த அருந்ததியர் சமூக மக்களுக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை 2009-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது வழங்கினார் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். அதுவரையிலும் பட்டியலின மக்களுக்கான ஒதுக்கீட்டில் முழுமையாக பலனை அடையாத சமூகமாக அருந்ததியர் சமூகம் இருந்து வந்தது. இதனை அப்பொழுது ஓய்வுபெற்ற நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியும் உறுதிப்படுத்தியிருந்தது. 

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழங்கிய உள் ஒதுக்கீட்டின் பயனால் அதுவரை கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் பெறாத அருந்ததியர் சமூக மக்கள், இன்றைக்கு உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்று வருகிறார்கள் என்பதை சமீபத்தில் வெளியான தரவுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இதுகுறித்து இன்றைய தி இந்து ஆங்கில நாளிதழில் விரிவான செய்திக்கட்டுரை வெளியாகியுள்ளது. 

மருத்துவக் கல்வியில் அருந்ததியர்களின் பிரதிநிதித்துவம் குறித்து வெளிவந்துள்ள தரவுகளின்படி 2018-19-ஆம்  ஆண்டில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 3,600 இடங்களில் 107 இடங்கள் அருந்ததியர் மாணவர்களுக்கு கிடைத்திருந்தன. திராவிட மாடல் ஆட்சியில் 2023-2024-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் 6,553 ஆக உயர்த்தப்பட்டு, அதன் மூலம் 193 அருந்ததிய சமூக மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு சென்றிருக்கிறார்கள்.

பல் மருத்துவ படிப்பை பொறுத்தவரை 2018-2019 ஆண்டில் மொத்தமுள்ள 1,080 இடங்களில் அருந்ததியர் சமூக மாணவர்களின் பிரதிநிதித்துவம் வெறும் 16 இடங்களே! அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை கூட முழுமையாக பூர்த்தி செய்ய இயலாமல், 1.5 விழுக்காடு அருந்ததியர் சமூக மாணவர்கள் மட்டுமே பல் மருத்துவம் பயின்றார்கள். இந்த அவநிலை 2023-24-ஆம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மாற்றமடைந்தது. 1,737 பல் மருத்துவ படிப்பிற்கான இடங்களில் அருந்ததியர் பிரிவு மாணவர்கள் 54 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கான 3 விழுக்காடு பிரதிநிதித்துவம் முழுமையாக கிடைத்தது. 

பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை 2009-10 ஆம் ஆண்டில் 1,193 இடங்களை பெற்றிருந்த அருந்ததியர் நிலை, 2023-24 ஆம் ஆண்டில் 3,944 இடங்களை பெற்று உயர்ந்துள்ளது.  ஒட்டு மொத்த பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீட்டின் பயனால் அருந்ததியர் பிரிவு மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் 2016-17 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வெறும் 8.7 விழுக்காடு அளவில்தான் பயன் பெற்று வந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் 16 விழுக்காடு பயனைப் பெற்றுள்ளனர். இதர பட்டியலின சமூக மக்கள் 84 விழுக்காடு பயனடைந்து வருகின்றனர். 

அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை கலைஞர் அவர்கள் நிறைவேற்றிய போது, ‘’அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை” என அன்றைக்கு சொன்னவர் ஜெயலலிதா. உள் ஒதுக்கீடு வழங்கிவிட்டு அமைதியாக இருக்காமல், அதற்கான தடைகளை தகர்த்து சட்டப் போராட்டங்களை உச்ச நீதிமன்றம் வரையில் போராடியது திமுக. அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு உத்தரவிட்டது 

பகுத்தறிவைத் துணைக் கொண்டு ஆட்சி நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு, எடுத்த முன்னெடுப்புகளால்தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் பெற்றதோடு, அருந்ததியர் சமூகத்தினர் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் உரிய பிரதிநிதித்துவத்தையும் பெற்றிருக்கிறார்கள். பள்ளத்தில் கிடப்போரைப் படிகளில் ஏற்றி வைத்திருக்கிறோம் என்ற பெருமிதத்தோடு செயல்படுகிறது திராவிட மாடல் அரசு. சமூக நீதிக்கான இலட்சியப் பயணத்தில் இச்சாதனை ஒரு முக்கிய மைல்கல்." என கூறியுள்ளார்.

மேலும் படிக்க | விஜய்யை திடீரென பாராட்டித் தள்ளும் முன்னாள் அமைச்சர்... உறுதியாகிறதா தவெக - அதிமுக கூட்டணி?

மேலும் படிக்க | போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்க போகும் தமிழ்நாடு அரசு - காரணம் இதுதான்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News