தேசிய விலங்கான புலிகளின் குணாதிசயங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ்குமார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ்குமார் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, நமது நாட்டின் தேசிய விலங்கான புலி நமது கலாச்சாரத்தோடும் பண்பாட்டோடும் ஒன்றிணைந்த உயிரினம்.
துல்லியமான கண்பார்வை கொண்ட புலியானது இந்தியாவின் 17 மாநிலங்களில் வசிக்கின்றன. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய புலிகளில் இந்தியாவில் தான் 80 சதவீதம் உள்ளன. புலிகளை பொறுத்தவரை சுமத்திரன் டைகர், சைபீரியன் டைகர், இந்தோ சைனீஸ் டைகர், மலேயன் டைகர், சவுத் சைனா டைகர் என ஆறு வகைகள் உள்ளது.
குறிப்பாக இந்தியாவில் ராயல் பெங்கால் புலிகள் அதிகம் உள்ளன. மேற்குவங்க மாநிலத்தில் சுந்தரவனக் காடுகளில் வசிக்கும் வங்கப் புலிகள் தான் இவை. 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 3682 புலிகள் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம்.
இந்தியாவில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கையில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள ஐந்து புலிகள் காப்பகம் மூலமாக புலிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காடுகளில் வசிக்கும் புலிகள் 15 ஆண்டுகள் வரையும், உயிரின பூங்காக்களில் பராமரிக்கப்படும் புலிகள் 20 ஆண்டுகள் வரையும் உயிர் வாழ்கின்றன.
புலிகள் காடுகளில் தங்களது எல்லைகளை நிர்ணயித்துக் கொள்ள நகம் மூலம் மரங்களில் காயங்கள் ஏற்படுத்துவது, நான்கு திசைகளிலும் சிறுநீரை வைத்து புலிகள் தங்களது எல்லையை வரையறுத்துக் கொள்கிறது. எல்லை தாண்டி வரும் புலிகளை உள்ளே அனுமதிக்க மறுப்பதோடு இருபுலிகளும் சண்டையிட்டு கொள்ளும்.
சண்டையில் வெற்றி பெறும் புலி அந்த எல்லையில் இருந்து கொள்ளும். புலிகளை பாதுகாப்பதன் மூலம் மரங்கள் அதிக அளவில் உருவாகின்றன. மனித குலம் சிறப்பாக வாழ வேண்டுமென்றால் காடுகளில் புலிகள் இருப்பது அவசியமாகிறது. அந்த வகையில் புலிகளைப் பாதுகாக்க வனத்துறையோடு பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.