Chennai Rain Highlights News : சென்னை முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கபட்டிருந்த நிலையில், இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை பார்க்கலாம்.
Chennai Rain Highlights Latest : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த கனமழை எச்சரிக்கை அறிவிப்பு நீக்கப்பட்டிருக்கிறது.
வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே முன்னெச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால், சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரண மையங்கள், மழை தொடர்பான புகார்களை பெற கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டன.
தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். பேரிடர் மீட்பு குழுக்கள் மண்டலம் வாரியாக அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன. மின்சாரம், வருவாய்த்துறை உள்ளிட்ட துறையினர் சுழற்சி முறையில் பணியில் இருந்தனர். மருத்துவத்துறை மற்றும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.
மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு அப்டேட்டை வெளியிட்டுக் கொண்டே இருந்தது. தனியார் வானிலை கணிப்பாளரான வெதர்மேன் என்கிற பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வானிலை தகவல் அப்டேட்டை வெளியிட்டுக் கொண்டே இருந்தார்.
வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதுதவிர 21 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் மற்றும் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக ரெட் அலெர்ட் மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக ஆந்திராவை நோக்கி இன்று அதிகாலை முதல் நகரத் தொடங்கியது.
சென்னையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திராவின் ராயல்சீமாவை நோக்கி நகர்ந்ததால் சென்னைக்கு இருந்த பெரும் கனமழை ஆபத்து நீங்கியது. இருப்பினும், சீரான கனமழை நாளை காலை 10 மணி வரை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்போதைய சூழலில் அதி கனமழைக்கு வாய்ப்பு இல்லை.
இருப்பினும் திருப்பதி - சென்னை, சென்னை - திருப்பதி இடையே பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை - திருப்பதி இடையேயான சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரோடு - சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கத்திவாக்கம் 248. 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நியூ மணலி டவுன் 245.1 சென்டி மீட்டர் மழை, கொளத்தூர் 223.8 சென்டி மீட்டர் மழை, பெரம்பூர் 224. 4 சென்டி மீட்டர் மழை, ஐயப்பாக்கம் 222.6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக ஆலந்தூரில் 58. 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.