Saif Ali Khan Latest News Updates: பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், தனது உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவரை இன்று சந்தித்து அவருக்கு தனது நன்றியை தெரிவித்தார். இதுகுறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.
சைஃப் அலி கானை அவரது வீடு புகுந்து ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சைஃப் அலி கானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்று அவர் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜன. 16ஆம் தேதி நள்ளிரவின்போது மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றார். கொள்ளையன் வந்ததை பார்த்த வீட்டு பணியாளர்கள் அவரை தடுக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த சைஃப் அலி கானையும் அந்த நபர் 6 முறை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
உடனே அவர் மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதுகுத்தண்டில் இருந்து கூர்மையான பொருள்களை எடுத்துள்ளனர். அவருக்கு முதுகில் மட்டுமின்றி கழுத்திலும், கையிலும் காயம் ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து, அவரை தாக்கிய நபரை போலீசார் 30 மணிநேரத்தில் கைது செய்தனர். வங்கதேசத்தை சேர்ந்த ஷரிஃபுல் இஸ்லாம் ஷேஷாத் என்பவர்தான் சைஃப் அலி கானின் வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு, சைஃப் அலி கானையும் தாக்கி உள்ளார்.
மேலும், அவர் வங்கதேசத்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோதே போலீசார் அவரை கைது செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இது ஒருபுறம் இருக்க, காயமடைந்த 5 நாள்களிலேயே, அதாவது நேற்று சைஃப் அலி கான் நேற்று வீடு திரும்பினார்.
இது ஒருபுறம் இருக்க, சைஃப் அலி கான் இன்று அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணாவை சந்தித்து அவருக்கு நன்றி தெரிவித்தார். அன்று நள்ளிரவு நேரத்தில் தக்க சமயத்தில் அங்கு வந்த பஜன் சிங், 8-10 நிமிடத்தில் வீட்டில் இருந்து 2-3 கி.மீ., தூரத்தில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், இன்று சைஃப் அலி கானை சந்தித்த பின் பஜன் சிங் ராணா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர்,"அவர் என்னிடம் சொன்னார், நீங்கள் என்னை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றீர்கள். மேலும் எனக்கு நன்றி தெரிவித்தார்" என்றார்.
மேலும், சைஃப் அலி கான் கொடுத்த நிதி உதவி குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர்,"நான் எதையும் அவரிடம் எதிர்பார்க்கவில்லை, அது அவருக்கு நன்கு தெரிந்த விஷயம். அதைப் பற்றிப் பேசுவது சரியானது அல்ல. அவர் எனக்குக் கொடுத்ததை நான் பெற்றுக்கொண்டேன். உண்மையில் இது பணத்தையும் பற்றியது அல்ல என்பதால் நான் அதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
சைஃப் அலி கான், ஆட்டோ ஓட்டுநருக்கு பஜன் சிங் ராணாவுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.