Central Government Employees: 8வது ஊதியக்குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது மத்திய அரசு ஊழியர்கள் புதிய கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Central Government Employees DA/DR Arrears: 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் மாதம் வரை 18 மாதங்களாக அதாவது மூன்று தவணைகள் அகவிலைப்படிகள் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
மத்திய அமைச்சரவை கடந்த ஜன. 16ஆம் தேதி 8வது ஊதியக்குழுவுக்கு (8th Pay Commission) ஒப்புதல் அளித்தனர். இதனை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தினார். வரும் 2026 ஜன. 1ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
8வது ஊதியக்குழுவால் மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை ஊதியம் அதிகமாகும் எனவும், ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, 2020ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை, அதாவது 18 மாதங்களாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது இதுகுறித்த பேச்சுகளும் மத்திய அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து மீண்டும் எழுந்துள்ளது.
கரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என கூட்டு ஆலோசனை இயந்திரங்கள் தேசிய கவுன்சில் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா, கடிதம் வாயிலாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் வாயிலாக அறிய முடிகிறது என்றும் கரோனா பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முடக்கப்பட்ட 18 மாத டிஏ / டிஆர் நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கரோனா காலகட்டத்தில் பொருளாதாரம் மோசமாக இருந்ததாலும், அரசின் நிதிச்சுமையை குறைப்பதற்கும் அந்த தொகையை முடக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2020-21ஆம் ஆண்டுக்கு பின்னரும் பொருளாதாரத்தில் கரோனா பெருந்தொற்று காலகட்டத்தின் தாக்கம் இருக்கிறது என்றும் இதனால், 2020-21 ஆம் ஆண்டின் தொடர்புடைய டிஏ/டிஆர் நிலுவைத் தொகைகள் வழங்குவது சாத்தியமற்றது என மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி மாநிலங்களவையில் பேசியிருந்தார்.
மேலும், மூன்று தவணைகளாக வழங்கப்பட வேண்டிய மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியக்காரர்களின் அகவிலைப்படி நிறுத்திவைக்கப்பட்டது. இதன் மொத்த தொகை ரூ. 34,402.32 கோடிகள் ஆகும். இது அரசின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த தொகையை தற்போது வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.