How To Change The Name In Vehicle RC: கார், பைக் போன்ற வாகனங்களின் உரிமையாளர் மரணமடைந்துவிட்டால், அவரின் வாரிசுக்கு பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம்.
வாகனத்தின் உரிமையாளர் உயிரிழந்துவிட்டால் அந்த வாகனத்தை சட்ட ரீதியாக விற்பதற்கு முன்பு, வாரிசு பெயருக்கு நிச்சயம் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அதற்கு இரண்டு நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றை இங்கு காணலாம்.
கார், பைக் போன்ற வாகனங்களின் பதிவு சான்றிதழ்களில் (RC - Registration Certificate) உரிமையாளர்களின் பெயரை மாற்றுவது அவசியமான ஒன்றாகும். இதனை நீங்கள் ஆன்லைன் வழியாகவும் மேற்கொள்ளலாம். ஆர்டிஓ அலுவலகம் சென்றும் மேற்கொள்ளலாம்.
ஆர்டிஓ அலுவலகம் சென்று விண்ணப்பம் 29 மற்றும் விண்ணப்பம் 30 ஆகியவற்றுடன் சில ஆவணங்களை சமர்பித்து, பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை செலுத்தினால் போதும். பெயர் மாற்றம் செய்யாமல் வாகனம் ஓட்டினால் அதனை திருட்டு வாகனம் என கருதி உங்களை சிறையில் அடைக்கவும் வாய்ப்புள்ளது.
ஆனால், இதில் பல பேருக்கும் பல்வேறு சந்தேகமும், கேள்விகளும் இருக்கும். குறிப்பாக, வாகனத்தின் தற்போதைய உரிமையாளர் உயிரிழந்துவிட்டால் எப்படி பெயர் மாற்றம் செய்வது என்பது பெரும்பாலானோருக்கு இருக்கும் கேள்வியாகும்.
இதற்காக அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் விதிமுறைகளில் மாற்றம் செய்தது. அதாவது, வாகன உரிமையாளர் வாகன சான்றிதழ்களில் தங்களின் வாரிசு குறித்த தகவலை குறிப்பிட வேண்டும் என விதிமுறை கொண்டுவரப்பட்டது. அப்படி குறிப்பிட்டிருந்தால் பின்வரும் வழிமுறையை பின்பற்ற வேண்டும். பெயர் மாற்றம் செய்யாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படலாம்.
வாகனத்தின் பதிவுச் சான்றிதழில், உரிமையாளர் அவரது வாரிசு பெயர் குறிப்பிட்டிருந்தால், உரிமையாளரின் மரணத்திற்கு பின்னர் எளிமையாக பெயர் மாற்றம் செய்யலாம். வாகனத்தின் பதிவு சான்றிதழ், வாகன காப்பீடு, வாரிசாக குறிப்பிடப்பட்டவரின் ஓட்டுநர் உரிமம் (Driving License) மற்றும் ஆதார் கார்டை சமர்பிக்க வேண்டும். கூடவே உரிமையாளரின் இறப்பு சான்றிதழையும் சமர்பித்து, விண்ணப்பம் 31-ஐ நிரப்பி மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும். கூடவே பெயர் மாற்ற கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
ஒருவேளை வாகன பதிவு சான்றிதழில் வாரிசு பெயர் குறிப்பிடாவிட்டாலும் பிரச்னையில்லை. அப்போதும் எளிமையாக பெயர் மாற்றம் செய்யலாம். ஆனால், அதன்பின் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் உயிரிழந்த வாகன உரிமையாளரின் மனைவி, மகன், மகள் உள்ளிட்ட ரத்த உறவுகளின் பெயர்களுக்கு மட்டுமே மாற்ற முடியும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
அந்த வகையில், வாகன பதிவு சான்றிதழ் யார் பெயருக்கு மாற்றப்பட வேண்டுமோ, அவரின் ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, பான் கார்டு, உரிமையாளரின் இறப்பு சான்றிதழ், உயிரிழந்த உரிமையாளருக்கும் இவருக்கும் தொடர்பை நிரூபிக்கும் ஆவணம், வாகனத்தில் பதிவு சான்றிதழ், காப்பீடு சான்றிதழ், மாசு கட்டுப்பாடு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பம் 31-ஐ நிரப்பி சமர்பிக்க வேண்டும்.
இவை மட்டுமின்றி, உயிரிழந்த உரிமையாளரின் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த பெயர் மாற்றத்தில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதை உறுதிசெய்யும் வகையில் ஒரு NOC கடிதம் ஆகியவற்றையும் சமர்பிக்க வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.