Ration Card | ரேஷன் கார்டுகளில் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Ration Card News | தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டுகளில் இருக்கும் பிரச்சனைகளை மக்கள் எளிமையாக தீர்த்துக் கொள்ள மாதாந்திர குறைதீர் முகாம்கள் தேதியை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ரேஷன் கார்டு (Ration Card) தொடர்பான சிக்கல்களை தீர்க்க மாதாந்திர குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜனவரி மாதத்துக்கான குறைதீர் முகாம்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் அவர்களின் கடிதத்தில், பிரதிமாதம் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டங்களிலும், பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்ற அறிவுரைகளின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களிலும் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிக்கல்களை முறைப்படி மனு அளித்து தீர்த்துக் கொள்ளலாம். அதன்படி, ஜனவரி 2025 மாதத்திற்கான குறைதீர் முகாம் 25.01.2025 சனிக்கிழமை அன்று வட்ட அளவில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.
மேற்படி வட்ட அளவில் நடைபெறும் குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா (PHH-AAY) குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள், அக்குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல்ரேகையை (Biometric) தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பதிவு செய்து கொள்ளுமாறு என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேபோல் சென்னை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் வரும் 25 ஆம் தேதி உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது. இந்த முகாமிலும் மக்கள் கலந்து கொண்டு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல் உள்ளிட்ட மனுக்களை கொடுக்கலாம்.
இதேபோல் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வரும் ஜனவரி 25 ஆம் தேதி குறைதீர் முகாம்களை நடைபெறுகிறதா? என்பதை அறிந்து இந்த நாளில் சென்று ரேஷன் கார்டு தொடர்பான சிக்கல்களை முறைப்படி மனு அளித்து தீர்த்துக் கொள்ளலாம்.
சென்னையை பொறுத்தவரை 19 மண்டலங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ரேஷன் அட்டைதாரர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளும்மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.