Relationship Tips ; நெருங்கிய தோழி என்றாலும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதை உணருங்கள்
பெண்கள் சிலர், நெருங்கிய தோழி என்பதற்காக விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வது அவர்களுக்கே ஆபத்தில் முடியும்.
பெண்கள் நட்பில் இருக்கிறபோது உணர்ச்சிவசப்பட்டு நட்புக்கு உண்மையாக இருகிறோம் என நினைத்துக் கொண்டு எல்லா விஷயங்களையும் தோழியிடம் பகிர்ந்து கொள்வார்கள். இது மிகப்பெரிய ஆபத்து என்பது பின்னாளில் தான் புரிந்து கொள்வார்கள்.
யாராக இருந்தாலும் அவர்களுக்கென ஒரு எல்லை இருக்கிறது. உங்களுக்கு என தனிப்பட்ட ரகசியங்கள் இருக்கிறது. அவற்றை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. பெற்றோர், சகோதரர், சகோதரி, முன்னாள் காதலன், இப்போதைய காதலன், தோழி என உங்களிடம் பழகுபவர்களிடம் என்னென்ன விஷயங்களை சொல்ல வேண்டுமோ அதனை மட்டும் தான் சொல்ல வேண்டும்.
பெற்றோரிடம் காதலன் நடந்து கொண்ட விஷயத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடியாது. முன்னாள் காதலனைப் பற்றி இந்நாள் காதலனிடம் சொல்ல முடியாது. அப்படியே கூறினாலும் ஒரு எல்லைக்கு மேல் சில விஷயங்களை மட்டும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை சொல்ல முடியும்.
அதற்கு மேல் சொன்னால் உங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகலாம். அதனைப்போலவே தோழியிடமும் ஒரு எல்லை இருக்கிறது. உங்கள் தனிப்பட்ட ரகசியங்களை பகிர்ந்து எல்லாவற்றுக்கும் தோழியின் அறிவுரை எதிர்பார்க்காதீர்கள். அவர் உங்களை தவறாக வழிநடத்தக்கூட வாய்ப்பு இருக்கிறது.
உங்களின் புரிதல் வேறு, அவரின் புரிதல் வேறு என்பதை உணருங்கள். ஒருகட்டத்துக்கு மேல் நெருங்கிய தோழி உங்களுடன் இருக்கமாட்டார். உங்கள் வாழ்க்கை முழுவதும் வரப்போவதும் இல்லை. உங்களுடன் சேர்ந்து வாழப்போவதும் இல்லை.
அன்பை பரிமாறிக் கொள்ளும் அதேவேளையில் உங்களின் தனிப்பட்ட விஷயங்களில் அவரின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய கடமை தான். அவருடைய அறிவுரை தவறாக இருந்து, அதனால் நல்ல வாழ்க்கையை வீணாக இழக்க வேண்டிய சூழல் கூட உங்களுக்கு ஏற்படலாம்.
அதனை எண்ணி பின்னாளில் வருத்தப்பட தான் முடியுமே தவிர இழந்த வாழ்க்கை திரும்ப கிடைக்காது. உங்களின் வாழ்க்கைக்கு உதவும் விஷயங்களை பொறுத்தவரை நீங்கள் தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
குடும்பம், உங்கள் வாழ்க்கை என இவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து அதனடிப்படையில் சிந்தித்து முடிவெடுங்கள். உங்கள் சூழலை நன்றாகவே அறிந்து வைத்திருந்தாலும் உங்களின் தனிப்பட்ட முடிவுகளில் தோழியின் தலையீடு இருக்க வேண்டிய அவசியமில்லை.
ரகசியங்களை தெரிந்து கொண்டு அவரே உங்களின் நல்ல வாழ்க்கை மீது பொறாமைப்பட்டு கெடுத்துவிடவும் வாய்ப்பு இருக்கிறது. அதைக் கூட நீங்கள் உணர முடியாத நிலையில் தான் இப்போது இருப்பீர்கள். பிறப்பு மற்றும் இறப்பை தவிர மற்ற எல்லா விஷயங்களையும் நீங்கள் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த முடிவாக இருந்தாலும் உங்கள் வாழ்க்கைக்கானது என்பதை மனதில் வைத்து தோழியுடனான நட்பை தொடருங்கள்.