சென்னை அசோக் பில்லரில் உள்ள உதயம் தியேட்டர் கடந்த 2024 டிசம்பர் மாதம் மூடப்பட்டது.
கடந்த 40 வருடங்களாக சென்னையின் ஓர் அடையாளமாக இருந்து வந்த உதயம் தியேட்டர் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த தியேட்டர் உருவானது குறித்தும் கடந்து வந்த பாதைகள் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
சென்னை அசோக் பில்லர் என்றாலே முதலில் ஞாபகம் வருவது உதயம் தியேட்டர்தான். இந்த தியேட்டர் கடந்த 1983ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அண்ணாச்சிகள் தொடங்கிய பல கடைகள் தான் இன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உயர்ந்து நிற்கிறது. அப்படி இந்த தியேட்டரை கட்டி சென்னையின் அடையாளமாகியவர்களும் நெல்லையை சேர்ந்தவர்கள் தான்.
நெல்லை மாவட்டம் உதயத்தூரில் இருந்து வந்த பரமசிவம் பிள்ளை மற்றும் அவரின் 5 சகோதரர்கள் அசோக் பில்லர் சந்திப்பு அருகே இந்த தியேட்டரை கட்டினார்கள். தங்களின் சொந்த ஊர் உதயத்தூரின் நினைவாக இந்த தியேட்டருக்கு உதயம் என பெயர் வைத்தனர்.
முதலில் ஒரு ஸ்கிரீன் வைத்து கட்டப்பட்ட இந்த தியேட்டர் பின்னர் சந்திரன், சூரியன், மினி உதயம் என கூடுதல் ஸ்கிரீன் போட்டப்பட்டது.
நடிகர் அஜித் நடித்த ஆனந்த பூங்காற்றே திரைப்படத்தில் கூட உதயம் தியேட்டரில என் இதயத்தை தொலைச்சேன் என்ற பாடல் அமைக்கப்பட்டது. அந்த அளவிற்கு இந்த தியேட்டர் பிரபலமானது.
இந்த நிலையில், பிரபல கட்டுமான நிறுவனம் இந்த தியேட்டரை வாங்கியருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
தற்போது இந்த தியேட்டரை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இங்கு 25 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.