நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!
நடிகை அமலாபால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கதையின் பலமும், அமலா பாலின் தோரணையும் இப்படத்தை வெற்றி பெற செய்தது. இப்படத்தை தொடர்ந்து தற்போது ஆடை, அதோ அந்த பறவை போல மற்றும் சில மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ஆடை படத்தை மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்குகிறார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரின் கடைசிக் காட்சியில் நடிகை அமலாபால் ஆடையின்றி நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு 'A' சான்றிதழ் அளித்துள்ளது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சமயத்தில் நடிகர் விஷால், அமலாபாலின் தைரியத்துக்கு பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான டீசருக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அமலாபாலின் துணிச்சலான நடிப்புக்கு பாராட்டு தெரிவித்து இயக்குநர் புஷ்கர், காயத்ரி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.