Sukran Peyarchi In Leo: வாழ்க்கையில் சந்தோஷம், மகிழ்ச்சி, ஆடம்பரம், கெளரவம், அழகு, பிரபலம் என அனைத்தும் பரிபூரணமாக கிடைத்து வாழவேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கிறது. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்ற வாழ்த்தில் எல்லாவிதமான சுகங்களும் அடங்கிவிடுகின்றன. அனைத்து செல்வங்கள் கிடைத்தாலும், அதை அனுபவிக்கவும் இறையருள் தேவை.
இறையருள் இருந்தால் தான் ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சரியான இடத்தில் அமர்ந்து, செல்வங்களை வழங்குவார். பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் இடமே, வாழ்க்கையின் அடிப்படையான வசதி வாய்ப்பு, ஆடம்பரம் மகிழ்ச்சிக்கு காரகமாக இருந்தாலும், கிரகப் பெயர்ச்சியினால் சுக்கிரன் மாறும் இடம், வேறு கிரகங்களுடன் இணைவது என்பது போன்ற விஷயங்களால் வாழ்க்கையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும்.
தற்போது கடக ராசியில் இருக்கும் சுக்கிரன், நாளை அதாவது ஜூலை 31 ஆம் தேதி மதியம் சிம்ம ராசிக்கு சஞ்சார மாற்றம் செய்கிறார். ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை சிம்மத்தில் இருந்து அருள் பாலிக்கும் சுக்கிர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
சிம்மத்தில் சுக்கிரன் இருக்கும்போது மட்டுமல்ல, பிற கிரகங்களுடன் சுக்கிரன் இணையும் போது ஏற்படக்கூடிய பலன்களைத் தெரிந்துக் கொள்வோம்.
சுக்கிரனும் சூரியனும்
அக்னித்துவம் கொண்ட சூரியனும், நீர்த்தன்மை கொண்ட சுக்கிரனும் இணைவது அனைவருக்கும் பெரிய அளவில் நன்மை பயக்காது என்பது ஜோதிடம் சொல்லும் பலன் ஆகும். அக்னியுடன் நீர் சேர்ந்தால் நீர் ஆவியாகிவிடும். சூரியனின் உக்ரத்தின் முன் சுக்கிரனின் சக்தி குறைந்துவிடும், அதனால், ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் மிகவும் வலுவாக இருந்தாலும், சுக்கிரனும் சூரியனும் சேரும்போது, சுக்கிரனின் பலம் குறைந்துவிடும்.
சுக்கிரனும் சந்திரனும்
மனோகாரகரான சந்திரன், மிகவும் மென்மையானவர், சுக்கிரன் ஆடம்பரத்தையும் கவர்ச்சியையும் கொடுப்பவராக இருப்பதால், சுக்கிரனுடன் சந்திரன் இணையும்போது, காதல் வயப்படுவது, அன்புக்கான ஏக்கம் ஆகியவை அதிகரிக்கும். சந்திரனும் சுக்கிரனும் இணைவது நல்ல மனோபாவத்தை ஏற்படுத்தும். அழகுக்கும் அன்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பவாராக ஒருவர் மாறிவிடுவார். அதேபோல், சுக்கிரன் சந்திரன் இணைவால், தாயுடனான உறவு மட்டுமல்ல, அனைவரிடமுமான உறவு மேம்படும்.
சுக்கிரனும் செவ்வாயும்
உடல் வலிவு, வீரம், வீரியம், தைரியம், பிடிவாதம் போன்ற குணங்களுக்கு காரகரான செவ்வாயுடன் சுக்கிரன் இணையும்போது மனம் காதல்வயப்படுவதும், காம இச்சைகள் தோன்றும் நிலையும் ஏற்படும். இதனால் மனம் உல்லாசமாகவும் அன்பானதாகவும் மாறும். ஆனால், வார்த்தை பிரயோகத்தால் உறவுகளிடம் மனவருத்தத்தை ஏற்படுத்தும் சூழல் ஏற்படும். இது சற்று பின்னடைவு என்று சொன்னாலும், பூமிக்காரகரான செவ்வாயும், ஆடம்பரத்திற்கு காரககாரான சுக்கிரனும் இணைவதால் வீடு, நிலம் என சொத்து வாங்கும் யோகமும் ஏற்படும்.
சுக்கிரனும் புதனும்
புத்தி காரகரான புதனுடன் செவ்வாய் இணைந்தால் வெற்றி வசப்படும். பொதுவாக புதனும் செவ்வாயும் இணைந்தால், அதனை மதனகோபால யோகம் என்று அழைக்கிறோம். புத்திசாலித்தனம், இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். சுக்கிரன் மற்றும் புதன் இரண்டுமே நட்புத்தன்மை கொண்ட சுப கிரகங்களாக இருப்பதால் இந்த இணைவு எந்த பாவகத்தில் உள்ளதோ அந்த பாவகம் சார்ந்த விஷயங்கள் அருமையானதாக இருக்கும்.
மேலும் படிக்க | ஆடி கிருத்திகையில் ஆடல்வல்லானின் மகன் மாலோன் மருகன் கார்த்திகேயனை வணங்குவோம்!
சுக்கிரனும் குருவும்
குருவுடன் சுக்கிரன் இணைந்தால் கண்ணியமான வாழ்க்கை, பொறுப்பு உணர்ச்சி, அனுசரித்துப்போகும் தன்மை, வசதியான வாழ்க்கை, கவர்ச்சியான தோற்றம் என அனைவரின் மத்தியில் மதிப்பான வாழ்க்கை அமையும். இருந்தாலும், பாலின ரீதியாக தொந்தரவு, பிரச்சனை தேடிவந்து சேர்வது என பிரபல்யத்திற்கான விலையையும் கொடுக்க வைக்கும் இணைவு இது.
சுக்கிரனும் சனியும்
காதல், காமம் மட்டுமல்ல, அன்பு, மகிழ்ச்சி என வாழ்க்கையை அனுபவிப்பதற்கான உணர்வுகளுக்கான காரகரத்துவம் பெற்ற சுக்கிரன், சோம்பல், மந்தமான இயக்கத்தைக் கொண்ட சனியுடன் இணைவது நல்லதல்ல. சுக்கிரன் கொடுக்கும் இன்பத்தை நுகரும் விருப்பத்திற்கும், சனியின் கர்மத்தை தீர்க்க வைக்கும் காரகமும் இணைந்து, வாழ்க்கையில் கஷ்டத்தைக் கொடுக்கும். முறையற்ற ஆசை, தகுதிக்கு அதிகமான ஆசை மனம் அலைபாயும். இதுவே ஜாதகருக்கு இந்த இரு கிரகங்களுமே நல்ல இடத்தில் இருந்தால், தொழில் மற்றும் பணியில் அதிக ஈடுபாடு, உழைப்பினைக் கொடுத்து பிரபலத்தை ஏற்படுத்தும்.
சுக்கிரனும் ராகுவும்
மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கும் சுக்கிரனுடன் ராகு இணைந்தால், சுகபோகங்களை அனுபவிப்பதில் கட்டுப்பாடோ வரைமுறையோ இருக்காது. சுக்கிரனுடன் ராகு மிகவும் நெருக்கமாக நெருங்கினால், காரியத் தடைகள், ஏமாற்றங்கள், பிரச்சினைகளைக் கொடுக்கும். வாழ்க்கை துணையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யமுடியாதவராக தலைகுனிய வேண்டிய சூழல் ஏற்படலாம்.
சுக்கிரனும் கேதுவும்
சுக்கிரனின் இயல்புக்கு எதிரான குணங்களான தனிமை, சலிப்பு, விரக்தி, விருப்பமின்மை, பற்றற்ற நிலை, பக்குவப்பட்ட மனது, எதார்த்தமான சிந்தனையைத் தரும் கேதுவும், சுக்கிரனும் இணைந்தால் என்ன நடக்கும்? மனதில் போராட்டம்,
திருமண வாழ்க்கையில் சிக்கல், தாம்பத்தியத்தில் நாட்டம் குறைவு, உறவுகளால் வஞ்சிக்கப்படுவது, எந்தவொரு விஷயத்தின் உட்கருத்தை விளங்கிக் கொள்வதால் ஏற்படும் ஈடுபாடற்ற தன்மை வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ