தோனி பிறந்த ராஞ்சியில் இருந்தே இந்திய அணிக்கு அடுத்த தோனி கிடைத்துவிட்டார் என துருவ் ஜூரல் பேட்டிங்கை பார்த்து சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய துருவ் ஜூரல் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருடைய சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நல்ல நிலையை எட்ட முடிந்தது. இதனைப் பார்த்த கவாஸ்கர், துருவ் ஜூரலுக்கு இப்படியொரு பாராட்டுகளை கொடுத்திருக்கிறார். துருவ் ஜூரலும் தோனியைப் போலவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தான் இந்திய அணியில் விளையாடுகிறார். அதுவும் தோனியின் சொந்த ஊரான ராஞ்சிகாரர் தான் அவர்.
இதனால் அவர் எப்படி விளையாடப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை விளையாடி கவனத்தை ஈர்த்திருகிறார் துருவ் ஜூரல். அவருடைய சொந்த மைதானத்திலேயே இப்போட்டி நடப்பதால் சூழலை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஜூரல், 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் விளாசி 90 ரன்கள் எடுத்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் டாம் ஹார்டிலி பந்துவீச்சில் போல்டானார். பேட்டிங்கில் மட்டுமல்ல விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தினார் அவர்.
இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் டாப் கிளாஸான இரண்டு கேட்சுகளை பிடித்தார் ஜூரல். இந்த இரு கேட்சுகளும் அபாரமானவை என்பதால் அவருடைய விக்கெட் கீப்பிங்கிற்கும் சேர்ந்தே பாராட்டு குவிந்து வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனமும் ஜாம்பவான் வீரருமான சுனில் கவாஸ்கர் பேசும்போது, துருவ் ஜூரலை இன்னொரு தோனியாக பார்ப்பதாக பூரிப்புடன் கூறியிருக்கிறார். " துருவ் ஜூரல் இன்னொரு எம்எஸ் தோனி என நான் கூற விரும்புகிறேன். உண்மையில் தோனியின் உயரம் மற்றும் புகழ் எல்லாம் தெரியும் என்றாலும், தோனியைப் போலவே விக்கெட் கீப்பிங், ஸ்டம்பிங் மற்றும் போட்டி குறித்த விழிப்புணர்வு எல்லாம் நான் ஜூரலிடம் பார்க்கிறேன். தோனியைப் போல் இன்னொருவர் வர முடியாது என்றாலும் அரம்ப காலத்தில் தோனியும் ஜூரலைப் போல தான் கிரிக்கெட் விளையாட்டை தொடங்கினார்" என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஜூரல் ஒரு ஸ்மார்டான கிரிக்கெட் வீரர் என்றும் கவாஸ்கர் புகழ்ந்திருக்கிறார். இதனிடையே இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் இந்திய அணி விக்கெட் இழப்பில்லாமல் 40 ரன்கள் எடுத்திருக்கிறது. களத்தில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஷ்வால் ஆகியோர் இருக்கின்றனர். 4வது நாள் ஆட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இன்னும் 152 ரன்கள் எடுத்தால் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற முடியும். அதேபோல், இங்கிலாந்து அணி இந்திய அணியின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் வெற்றி பெறலாம். இதனால் பரபரப்பான கட்டத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ