இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆசி., பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் மட்டுமே எடுத்தது. 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்தியா 47.5 ஓவரில் 294 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த மூன்றாவது போட்டியில், இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. இந்தூரில் விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. தொடர்ந்து 9 வெற்றிகளைப் பெற்றதன்மூலம், டிராவிட் மற்றும் தோனியின் சாதனைகளை கோலி சமன்செய்துள்ளார்.
இந்நிலையில், போட்டிகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேப்டன் கோலி:-
"இந்த வெற்றியால், நாங்கள் மிகவும் திருப்தியடைந்துள்ளோம். பாண்ட்யாதான் இந்திய அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம். அவரால், பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என்று அனைத்து ஏரியாவிலும் அசத்த முடியும்.
பாண்ட்யாவை 4-வது டவுனில் களமிறக்கலாம் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரிதான் ஐடியா கொடுத்தார். சுழற்பந்துவீச்சை அடித்து நொறுக்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது".
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.