இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோய் ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் விளையாடிய இங்கிலாந்து அணிமுதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது.
அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய துவக்க வீரர்கள் கே எல் ராகுல் மற்றும் தவான் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் நாள் முடிவில் இந்தியா 19/0 என இருந்தது. தவான் 3 ரன்களுடனும், ராகுல் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 19(24) ரன்களும், ஷிகர் தவான் 23 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.
புஜாரா மற்றும் இந்திய கேப்டன் விராத் கோலி ஆடினர். இந்த ஜோடி நிதானமாக விளையாடினர். விராத் கோலி அரைசதம் அடிப்பார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், 46(71) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். ஆனால் புஜாரா மட்டும் நிலைத்து நின்று ஆடி தனது 15_வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 257 பந்துகளை சந்தித்து 132 ரன்கள் எடுத்தார். இது இங்கிலாந்து எதிராக அவர் அடித்த 5வது சதமாகும். கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
டெஸ்ட் போட்டியை பொருத்த வரை இவரின் அதிகபட்ச ரன்கள் 206* நாட்-அவுட் ஆகும். இந்த ரன்கள் இங்கிலாந்து எதிராக 2012 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 60 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள இவர், இதுவரை மொத்தம் 15 சதங்களும், 18 அரை சதங்களும் உட்பட 4635 ரன்கள் எடுத்துள்ளார்.
A hard fought CENTURY for @cheteshwar1.
This is his 1st century in England, 5th against England and 15th overall in Tests.#ENGvIND pic.twitter.com/S1TzJp2iA6
— BCCI (@BCCI) August 31, 2018
273 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் பிற்பகல் தொடங்க உள்ளது.